அரசியல்

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு ஏற்பு: பாமகவினர் எதிர்ப்பு!

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட விஜய் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டது.

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு ஏற்பு: பாமகவினர் எதிர்ப்பு!
TVK Vijay
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவரது வேட்புமனுக்கள் இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், சொத்து மதிப்பு குறித்த புகார்களால் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது.

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் போட்டியிடத் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள், இன்று நடைபெற்ற வேட்புமனுப் பரிசீலனையில் தேர்தல் அதிகாரிகளால் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன் மூலம் அவர் அதிகாரப்பூர்வமாகத் தனது முதல் தேர்தல் களத்தைச் சந்திக்கிறார்.

சொத்து மதிப்பு சர்ச்சை

விஜய் தனது வேட்புமனுவில் சுமார் 603 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதில் 404 கோடி ரூபாய் அசையும் சொத்துகளாகவும், 198 கோடி ரூபாய் அசையா சொத்துகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த நிதியாண்டில் மட்டும் அவர் 184.53 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்தச் சொத்து மதிப்பை விஜய் தவறாகக் காட்டியுள்ளதாகப் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது உண்மையான சொத்து மதிப்பை மறைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முழுமையாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஏப்ரல் 9-ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.