அரசியல்

ஆர்.பி. உதயகுமார் தாயார் மரணம்.. சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன்!

ஆர்.பி. உதயகுமாரின் தாயார் மரணம் குறித்து தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு செங்கோட்டையன் மன்னிப்பு கோரினார்.

ஆர்.பி. உதயகுமார் தாயார் மரணம்.. சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன்!
Sengottaiyan apologizes for controversial comment
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தாயார் மரணம் குறித்து செங்கோட்டையன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது கருத்துக்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

'வயிறு எரிச்சல் பிடித்த மனிதர்கள்..'- ஆர்.பி. உதயகுமார்

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால், அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. இந்த நிலையில், திடீரென டெல்லி சென்று மத்திய அமைச்சர்களான அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆர்.பி.உதயகுமார், "ஒற்றுமை என்ற பெயரில் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்த சிலர் திட்டம் தீட்டுகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் பயணத்திற்கு அலை அலையாக மக்கள் வருவதை தாங்கிக்கொள்ள முடியாத வயிறு எரிச்சல் பிடித்த மனிதர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தோல்வியைத் தரும்" என்று செங்கோட்டையனைக் குறிப்பதாகப் பேசியிருந்தார்.

செங்கோட்டையனின் சர்ச்சை கருத்து

இந்தக் கருத்து குறித்து, நேற்று கோபி குள்ளம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஆவேசமாக பதிலளித்த அவர், "ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மரணமடைந்து இருக்கிறார். முதலில் அவரை அதை பார்க்கச் சொல்லுங்கள்" என்று கூறி அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார். தாயார் மரணம் குறித்த இந்த பதில், பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன்

இதையடுத்து, சில மணி நேரங்களில் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், தனது முந்தைய கருத்துக்காக மன்னிப்புக் கோரினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "ஆர்.பி.உதயகுமார் தொடர்பாகக் கேட்டார்கள். அப்போது நான் சொன்ன கருத்துக்கு மன்னிக்க வேண்டும். அவர் துக்கத்திலே தாயை இழந்து கண்ணீரில் மல்கி கொண்டிருந்தபோது, அவரது குடும்பத்தினரை நேரில் சந்திக்க இயலவில்லை. அவருடைய தாயை இழந்து துக்கத்திலும், துயரத்திலும் இருக்கும் இந்த வேளையில், தாயின் அருமை பெற்ற மகனுக்கு மட்டுமே தெரியும். துக்கத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவரது ஆத்மா சாந்தியடைய அனைவர் சார்பாகவும் கண்ணீர் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.