அரசியல்

சென்னையில் 100க்கும் மேற்பட்ட தவெகவினர் கைது...டாஸ்மாக்கை மூடக்கோரி நடந்த போராட்டத்தால் பரபரப்பு

சென்னை அமைந்தகரையில் டாஸ்மாக் கடையை கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழகத்தினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது

 சென்னையில் 100க்கும் மேற்பட்ட தவெகவினர் கைது...டாஸ்மாக்கை மூடக்கோரி நடந்த போராட்டத்தால் பரபரப்பு
கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள்
தவெகவினர் போராட்டம்

சென்னை அமைந்தகரை புல்லா அவன்யூவில் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி தமிழக வெற்றிக்கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மாவட்ட கழகச் செயலாளர் பழனி தலைமையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கூடினர்.

அப்போது காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி வழங்காததால் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே சுமார் 20-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தினரை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர்.

துரத்தி துரத்தி கைது

பின்னர் மீண்டும் வேறொரு இடத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் துரத்திச் சென்று அவர்களை கைது செய்ய சென்றனர். அப்போது நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பெண்கள் சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், பள்ளி, நூலகம், மருத்துவமனை, நியாயவிலை கடை உள்ளிட்டவை அருகில் டாஸ்மாக் மதுபான கடை திறந்திருப்பதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை நம்மோடு வலியுறுத்தி தாங்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை

போராட்டம் நடத்துவது தொடர்பாக காவல்துறையிடம் மனு கொடுத்த போதும் அனுமதி கொடுக்காத நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட திட்டமிடும்போது கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் இல்லை எனில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.