அரசியல்

'சினிமாவில் பியூஸ் போன பிறகு..': விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர்!

சினிமா கம்பெனி ஆரம்பித்து இளைஞர் சமுதாயத்தைச் சீரழிவு பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.

'சினிமாவில் பியூஸ் போன பிறகு..': விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர்!
Minister's veiled attack on Vijay
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில், மறைந்த அமைச்சர் கோசி மணியனின் 97வது பிறந்த தினப் பொதுக்கூட்டம் நேற்று (செப்.13) இரவு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு

கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "முன்பு கட்சியை வளர்க்க மோட்டார் சைக்கிளிலும், பேருந்துகளிலும் பயணித்து மக்களின் ஆதரவைப் பெற்று கட்சியை வளர்த்தனர். ஆனால் தற்போது, சினிமாவில் பியூஸ் போன பிறகு, சினிமா கம்பெனி ஆரம்பித்து, தன்னை நாளைய முதல்வர் என இளைஞர்களை நம்ப வைத்து, இளைஞர் சமுதாயத்தைச் சீரழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறார்.

இன்று மூடிய பேருந்தில் பயணம் செய்வது, மக்களுக்கும் இவருக்கும் உள்ள தூரத்தைக் காட்டுகிறது. இது கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கிறது" என்று, நடிகரும் தவெக தலைவருமான விஜய்யை அவர் மறைமுகமாக கடுமையாக விமர்சித்தார்.