அரசியல்

கரூர் பெருந்துயரம்: தவெக கரூர் மா.செ. கைது.. "சிறு கீறல் ஏற்பட்டாலும் போலீஸ்தான் பொறுப்பு"- மனைவி கண்ணீர் பேட்டி!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் பெருந்துயரம்: தவெக கரூர் மா.செ. கைது..
TVK District Secretary arrested
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்.27 அன்று கரூரில் மேற்கொண்ட மக்கள் சந்திப்புப் பரப்புரையின்போது ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் சோகத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார், தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உட்பட பல நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தச் சூழலில், தனிப்படை போலீசார் நேற்று இரவு கரூரில் வைத்துத் தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனைக் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதியழகனின் மனைவி கண்ணீர் பேட்டி

மதியழகன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மனைவி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கண்ணீர் மல்க ஒரு வேண்டுகோள் விடுத்தார். "என் கணவர் சட்டத்தை மதிப்பவர். அஜித் குமார் லாக்கப் டெத் போல் என் கணவருக்கு எந்தச் சூழலும் ஏற்பட்டுவிடக் கூடாது. சிறு கீறல் ஏற்பட்டால் கூட காவல்துறைதான் பொறுப்பு" என்று அவர் உருக்கத்துடன் பேசினார்.