அரசியல்

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

“பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நிகழாமலிருக்க தக்க ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
Nainar Nagendran

சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒரு பெண் தொழிலாளி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி - சாத்தூர் இடையே அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியானதாகவும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மன வேதனையளிக்கின்றன.

விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைந்து முழு ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு சார்பில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டு பாதுகாப்பு விதிகளை பரிசோதிக்காததன் விளைவாகத் தான், பட்டாசு ஆலைகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. எனவே, இனியும் இதுபோன்ற விபத்துகள் நிகழாமலிருக்க தக்க ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமெனவும், படுகாயமடைந்தவர்களின் முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.