சினிமா

அது என்னங்க டைட்டில் 'கயிலன்'? மேடையில் விளக்கம் கொடுத்த இயக்குநர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளான ஷிவதா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் தலைப்பான ’கயிலன்’ என்பதற்கான பொருளை ரசிகர்களுக்காக தெளிவுப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

அது என்னங்க டைட்டில் 'கயிலன்'? மேடையில் விளக்கம் கொடுத்த இயக்குநர்
Kayilan Tamil movie Trailer launch event
BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்யா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு (டிரைலர்) விழா சென்னையில் நடைபெற்றது.

ஜூலை 25-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கயிலன் ' திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன் ஆகியோருடன் பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள்.

விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

நடிகை ஷிவதா படம் குறித்து பேசுகையில், '' 'நெடுஞ்சாலை' படத்திலிருந்து 'கயிலன்' படம் வரை எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. வருடத்திற்கு ஒரு தமிழ் படத்தில் தான் பணியாற்றுகிறேன், இருந்தாலும் தொடர்ந்து நீங்கள் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த ஆதரவு இந்தப் படத்திற்கும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்," என்றார்.

கயிலன்: படத்தலைப்புக்கான பொருள் என்ன?

அதனைத் தொடர்ந்து இயக்குநர் அருள் அஜித் பேசுகையில், ''உதவி இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளர் தேவை. அந்த வகையில் என்னை நம்பி இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பி.டி.அரசகுமாருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். தயாரிப்பாளருக்கு இன்னும் நான் திரையிட்டு காண்பிக்கவில்லை, விரைவில் காண்பிப்பேன். அப்படியொரு நம்பிக்கையை என் மீது தயாரிப்பாளர் வைத்திருக்கிறார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.

'கயிலன்' என்பதற்கான பொருள் என்னவென்றால், தவறு செய்யாதவன், நிலையானவன். சாதிப்பவன். இது ஒரு சங்க காலச் சொல். ஜீரோ எரர்ஸ் என்றும், தி பெர்பஃக்ஷனிஸ்ட் என்றும் சொல்லலாம். இந்தச் சொல் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் வைத்திருக்கிறோம். மேலும் இப்படத்தின் உச்சகட்ட காட்சியில் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. அதற்கும் இந்தச் சொல் பொருத்தம் என்பதால் வைத்திருக்கிறோம்.

இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது தயாரிப்பாளர் என்னிடம், 'நீங்கள் ஒரு கமர்ஷியல் படத்தை வழங்க உள்ளீர்கள். அதில் எங்கேயும் வாய்ப்பு கிடைத்தால் நல்லதொரு மெசேஜை சொல்லுங்கள். சொல்ல முயற்சி செய்யுங்கள்' என்றார். இந்தப் படத்தில் ஒரு மெசேஜ் இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் ஒரு மெசேஜ் இருக்கிறது.

இந்தப் படத்திற்கு 115 நபர்கள் பின்னணி பேசி இருக்கிறார்கள் அந்த அளவிற்கு இந்த படத்தில் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கின்றன. எனவே கஷ்டப்பட்டு இப்படத்தினை நிறைவு செய்து இருக்கிறோம். ஜூலை 25-ம் தேதியன்று இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்''என்றார்.