உலகம்

வீரர்களாக மாறிய AI.. சீனாவில் ரோபோக்களுக்காக கால்பந்து போட்டி..!

சீனாவில் முதல்முறையாக ரோபோக்கள் மட்டுமே விளையாடும் கால்பந்து போட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. AI மூலம் ரோபோக்கள் இயக்கப்பட்டு, வீரர்கள் ரோபோக்களாக இருந்தாலும், நடுவராக மனிதரே செயல்பட்ட இந்தப்போட்டியை 500க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீரர்களாக மாறிய AI.. சீனாவில் ரோபோக்களுக்காக கால்பந்து போட்டி..!
வீரர்களாக மாறிய AI.. சீனாவில் ரோபோக்களுக்காக கால்பந்து போட்டி..!
சீனாவின் தலைநகர் பீஜிங்கில், உலகிலேயே முதல்முறையாக முழுமையாக ரோபோக்கள் மட்டுமே விளையாடும் கால்பந்து போட்டி கடந்த ( ஜூன் 28 ) நடைபெற்றது. சீனாவில் முதல் முறையாக மனிதர்கள் இல்லாமல், ரோபோக்கள் மட்டுமே பங்கேற்ற கால்பந்து போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது. மனிதர்களின் பங்கு இல்லாமல், முழுக்கமுழுக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலமாக இயக்கப்படும் ரோபோக்கள் தான் இந்த போட்டியில் வீரர்களாக களமிறக்கப்பட்டனர்.

இந்த அதிநவீன போட்டி சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் AI முன்னேற்றங்களை பிரதிபலிக்கிறது. பல மாதங்கள் திட்டமிட்ட இந்த போட்டியில், ரோபோக்கள் உற்சாகமாக கலந்துகொண்டன. அதிநுட்ப சென்சார், கேமரா மற்றும் உயர்தர இயக்கி அமைப்புகளால் செயல்படும் இந்த ரோபோக்கள், பந்தை அடிப்பது, பாஸ் கொடுப்பது, கோல் அடிப்பது போன்று திறமையாக செயல்பட்டன.

போட்டியின் மையக்கருவாக செயற்கை நுண்ணறிவு ( AI ) இருந்தாலும், நியாயமான தீர்ப்புகளை வழங்க மனித நடுவரே அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தார். ரோபோக்களின் செயல்களை கவனித்து, விதிமுறைகள் மீறப்பட்ட இடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போட்டி முழுவதும், ரோபோக்கள் தானாகவே செயல்பட்டன. ஆனால் சில சமயங்களில் ரோபோக்கள் விழுந்து எழ முடியாமல் போனபோது, அங்கிருந்த மனித ஊழியர்கள் ரோபோக்களை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர். இந்த சம்பவம் அப்போட்டியில், மனிதர்கள் விளையாடியது போன்ற உணர்வை சேர்த்தது.

ரோபோக்களுக்கான இந்த கால்பந்து போட்டியை நேரில் பார்வையிட 500க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வருகைதந்தனர். ரோபோக்கள் பங்கேற்று விளையாடிய கால்பந்து போட்டியை பார்த்த அவர்கள், எதிர்காலத்தில் மனிதர்களுக்கு இணையாகவே இல்லாமல், சில சமயங்களில் மேலோங்கக்கூடிய திறமையை இந்த ரோபோக்கள் காட்டியதாகக் குறிப்பிட்டனர்.

இந்த நிகழ்வு, விளையாட்டு உலகத்தில் AI ரோபோக்களின் பங்கு அதிகரிக்கப்போகும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், ரோபோக்களின் திறனை விளையாட்டுப் போட்டிகள் மூலமாக பரிசோதிக்க இது ஒரு முக்கிய மேடையாக அமைந்துள்ளது. இதே போன்று எதிர்காலத்தில் மேலும் பல தொழில்நுட்ப புதுமைகள் விளையாட்டு துறையில் நடைமுறைக்கு வரும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.