அரசியல்

விஜய் குறித்த கேள்விக்கு இனி பதில் இல்லை- பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி மற்றும் விஜய் குறித்த கேள்விகளுக்கு இனி பதிலளிக்கப்போவதில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் குறித்த கேள்விக்கு இனி பதில் இல்லை- பிரேமலதா விஜயகாந்த்
Premalatha Vijayakanth
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேர்தல் ஆணையம் ஒரு பொம்மை போலச் செயல்படுவதாகக் கடுமையாக விமர்சித்ததுடன், மக்கள் பிரச்சினைகளை விட்டுவிட்டு தேவையற்ற கேள்விகளைக் கேட்பதாகக் கூறிச் செய்தியாளர்கள் மீது கோபமாகப் பேசினார்.

தேர்தல் சீர்திருத்தம் அவசியம்

ராகுல் காந்தியின் போராட்டங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் வாக்குத் திருட்டு நடக்கிறது. அரசியலில் மட்டுமல்ல, தேர்தலிலும் அதிகார துஷ்பிரயோகம் தலைவிரித்தாடுகிறது. நேர்மையான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும், நீதிபதிகளும் முன்வர வேண்டும். அப்போதுதான் நாங்கள் தேர்தலில் நிற்பதற்கே ஒரு அர்த்தம் இருக்கும்" என்று தெரிவித்தார். மேலும், "பீகாரை மட்டும் குறை சொல்ல முடியாது, இந்தியா முழுவதும் தேர்தல் முறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்" என்றார்.

தேர்தல் ஆணையம் குறித்து விமர்சனம்

"தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் பொம்மையாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு உள்ளதே?" என ஒரு செய்தியாளர் கேட்டபோது, "தேர்தல் ஆணையம் இப்போதுதான் பொம்மையாக இருக்கிறதா? அது எப்போதுமே அப்படித்தான் இருக்கிறது. இது இன்றோ நேற்றோ நடக்கும் விஷயம் அல்ல. முதலில், ஓட்டுக்குக் காசு கொடுக்கும் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். கள்ள ஓட்டு, ஓட்டுத் திருட்டு போன்ற அராஜகங்களை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்குத் தேர்தல் ஆணையம்தான் உறுதியான முடிவை எடுக்க வேண்டும்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.

கூட்டணி மற்றும் தேர்தல் நிலைப்பாடு

2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்துக் கேட்டபோது, "மக்கள் மத்தியில் எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. நாங்கள் எங்கள் வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம். கூட்டணி பற்றி எல்லாம் நீங்களாகக் கற்பனை செய்தால் நான் பதில் சொல்ல முடியாது" என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். மேலும், "தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது, உரிய நேரத்தில் அதுபற்றி நாங்களே அறிவிப்போம்" என்றும் அவர் தெரிவித்தார்.

விஜய் குறித்த கேள்விக்கு பதிலில்லை

பேட்டியின் முடிவில், அ.தி.மு.க. மாநாடு தொடர்பான பிரச்சினை குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, பிரேமலதா விஜயகாந்த் திடீரென கோபமாகப் பேசத் தொடங்கினார்.

"நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். பத்திரிகையாளர்களுக்கு இதைத் தவிர வேறு கேள்வியே இல்லையா? நான் தினமும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். ஒன்று கூட்டணி பற்றி கேட்கிறீர்கள், இல்லையென்றால் நடிகர் விஜய் பற்றி கேட்கிறீர்கள். இந்த இரண்டு கேள்விகளைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு கேட்கத் தோன்றவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், கூட்டணி கூட்டணி குறித்த கேள்விக்கோ அல்லது விஜய் குறித்த கேள்விக்கோ இனி பதிலளிக்க போவதில்லை என்று அவர் கூறினார்.

"நான் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன். இங்குள்ள உப்பளத் தொழிலாளர்கள், சிறு, குறு தொழில்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் என எத்தனையோ இருக்கின்றன. பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண். நீங்கள் ஏன் மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர மறுக்கிறீர்கள்? அரசியல் என்பது மக்களுக்காகத்தான். இதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்" என்று காரசாரமாகப் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.