அரசியல்

'மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன்..' செங்கோட்டையன் பேட்டி!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி செல்வதாக தகவல் வெளியான நிலையில், ஹரித்வார் செல்வதாக அவர் விளக்கமளித்தார்.

'மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன்..' செங்கோட்டையன் பேட்டி!
Ex. Minister Sengottaiyan
அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று மனநிம்மதிக்காக ஹரித்வார் செல்வதாகத் தெரிவித்தார். டெல்லி சென்று பாஜக தலைவர்களைச் சந்திக்கப்போவதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவர், தனது நீக்கம் குறித்து, "காலம் தான் பதில் சொல்லும்" என்று கூறினார்.

அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கம்

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார். இதையடுத்து, மறுநாளே அவர் கட்சிப் பொறுப்புகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மனநிம்மதிக்காக ஹரித்வார் பயணம்

இந்த நிலையில், டெல்லிக்குச் சென்று பாஜக மூத்த தலைவர்களை செங்கோட்டையன் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இன்று காலை கோவை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, டெல்லி பயணம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "நான் டெல்லி செல்லவில்லை. மனநிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன். ராமரை தரிசனம் செய்துவிட்டு நாளை திரும்புகிறேன். அனைவரும் ஒன்றாக வேண்டும், கட்சி வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்" என்று பதிலளித்தார்.

கட்சியில் புறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது குறித்துக் கேட்கப்பட்டபோது, "நாம் நன்மைக்காக சில கருத்துக்களைச் சொல்கிறோம். இதில் பொதுச்செயலாளர் பல முடிவுகளை எடுக்கிறார். அவர் எடுக்கிற முடிவுகளைப் பற்றி கருத்துக்கள் சொல்ல இயலாது, காலம் தான் பதில் சொல்லும்" என்றார். மூத்த தலைவர்கள் யாராவது தொடர்பு கொண்டு பேசினார்களா என்ற கேள்விக்கு, "அது சஸ்பென்ஸ்" என்று அவர் பதிலளித்தார்.