அரசியல்

இபிஎஸ் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது - டிடிவி தினகரன் விமர்சனம்

"எடப்பாடி பழனிசாமி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது" என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இபிஎஸ் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது - டிடிவி தினகரன் விமர்சனம்
TTV Dhinakaran and Edappadi Palaniswami
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். "நன்றி மறப்பது நன்றன்று என பழனிசாமி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது" என்று அவர் சாடியுள்ளார்.

இபிஎஸ் பேச்சுக்கு பதிலடி

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத பழனிசாமி நன்றியைப் பற்றிப் பேசுவது பொருத்தமற்றது. "ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். பின்னர், அவரை மாற்றிவிட்டு சசிகலாவை முதல்வராக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது, திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பழனிசாமியைக் காப்பாற்றியது திமுக அல்ல, அதிமுகவின் 122 சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான். சசிகலா கூறியதால்தான் அவர்கள் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்," என்று அவர் கூறினார்.

இபிஸ் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள்

தொடர்ந்து பேசிய அவர், "கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டதால் தான் பழனிசாமி முதல்வரானார். கூவத்தூரில் இருந்த எம்எல்ஏக்களிடம் முதல்வர் வேட்பாளர் பெயரைச் சொல்லாமல் கையெழுத்து வாங்கச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலா பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக, 'நான் தான் முதல்வர் வேட்பாளர் என எம்எல்ஏ-க்களிடம் சொல்லாதீர்கள்; அவர்கள் எனக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்' எனச் சொன்னவரும் எடப்பாடி பழனிசாமிதான்," என்று அவர் தெரிவித்தார்.

டெல்லிக்குச் சென்றது ஏன்?

நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக்கூறியவர் பழனிசாமி. ஆனால், தன்மானம்தான் முக்கியம் என பேசிவிட்டு, தற்போது அவர் டெல்லிக்குச் சென்றது ஏன் என்றும் தினகரன் கேள்வி எழுப்பினார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என இதுவரை அமித் ஷா குறிப்பிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிமுகவிற்கு இப்போதுள்ள 20 சதவீத வாக்குகளும் வரும் தேர்தலில் 10 சதவீதமாகக் குறையத்தான் போகிறது என்று கூறிய தினகரன், 2026 சட்டமன்ற தேர்தலில் பழனிசாமி தோற்பதற்கு அவர்தான் காரணம் என்றும் தெரிவித்தார். டெல்லிக்குச் சென்று 6 கார்கள் மாறிமாறி திருட்டுத்தனமாக அமித் ஷாவைச் சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் குற்றம்சாட்டினார்.