அரசியல்

"எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல"- செங்கோட்டையன் பதிலடி!

"எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


Sengottaiyan
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வைத்த கடுமையான விமர்சனங்களுக்குப் பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோபி-சத்தி சாலையில் நடைபெற்ற 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனைக் குறிப்பிட்டுப் பேசினார். கோபியில் உள்ள ஒருவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மனம் திறந்து பேட்டி கொடுத்தார் என்றும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரைச் சந்தித்தார் என்றும் பழனிசாமி குற்றம் சாட்டினார்.

தலைமைக்கு எதிராகப் பேட்டி கொடுத்ததால் கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்தோம் என்று குறிப்பிட்ட அவர், அதன்பின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விழாவுக்குக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருடன் சென்றார் என்றும் கூறினார். அதனால் அவர் அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்தும் நீக்கப்பட்டார் என்றும், கட்சிக்குத் துரோகம் செய்ததால்தான் அவர் நீக்கப்பட்டார் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

செங்கோட்டையன் கொடுத்த பதில்

இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்குப் பதிலளித்தார். "எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று அவர் கூறினார். மேலும், "யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாக உள்ளேன். தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு அளிப்பார்கள்" என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி மோதல் பின்னணி

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை செங்கோட்டையன் முன்வைத்த நிலையில், அவரது கட்சி பொறுப்புகள் எடப்பாடி பழனிசாமியால் பறிக்கப்பட்டது. மேலும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விழாவில் ஓபிஎஸ், டிடிவியுடன் செங்கோட்டையன் பங்கேற்றதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். அங்கு அவருக்கு நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் பதவி வழக்கப்பட்டது.