அரசியல்

திமுக பயத்தின் உச்சத்தில் இருக்கிறது.. தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக பயத்தின் உச்சத்தில் இருக்கிறது.. தவெக தலைவர் விஜய் விமர்சனம்!
TVK Vijay
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தபோது, போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாகவும், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உட்பட ஆறு பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கு எதிராக, தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை வழக்குப்பதிவு

திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள பிள்ளையார் கோயிலுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர் கரிகாலன் உள்ளிட்டோர் கடந்த 6 ஆம் தேதி சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது, வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி அவர்கள் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் கடும் கண்டனம்

இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.

தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்.

அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என்.ஆனந்த் மீதும் நிர்வாகிகள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.