அரசியல்

திமுக அரசின் துரோகம் - மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் சாடல்!

கோவை மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி மறுப்பதாக திமுக அரசின் மீது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

திமுக அரசின் துரோகம் - மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் சாடல்!
திமுக அரசின் துரோகம் - மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் சாடல்!
பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், கோவையில் நடைபெற்ற ‘நலம்’ மருத்துவ முகாமில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்வதை தடுப்பதன் மூலம் திமுக அரசு அவர்களுக்கு துரோகம் செய்வதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு திட்டங்களுக்குத் தடை:

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் 'சேவை இருவாரம்' நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் 43வது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம்கள் நடத்த மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களுக்கு அனுமதி கேட்டால், கடந்த இரண்டு மாதங்களாக வேண்டும் என்றே அனுமதி மறுக்கப்படுவதாகவும், வேண்டுமென்றே கால தாமதம் செய்வதாகவும் அவர் கூறினார். இதனால், வேறு வழியின்றி தனியார் இடங்களுக்கு வாடகை கொடுத்து முகாம்களை நடத்த வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

"அரசாங்கமே மருத்துவ முகாம்கள் நடத்துவதால், உங்களுக்கு இடம் கொடுக்க முடியாது என கூறுகின்றனர். ஆனால், நாங்கள் நடத்துகின்ற ஒவ்வொரு மருத்துவ முகாமிலும் நூற்றுக்கணக்கானோர் பயன் பெறுகின்றனர். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் புகைப்படம் மட்டும் தான் மக்களுக்குத் தெரிய வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், தேர்தல் நெருங்கி வருகிறது. எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்களை முடக்க நினைக்கிறார்கள்" என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

கோவை மக்களின் பிரச்சனைகள்:

கோவை மக்களுக்கு 12 நாட்களுக்கு ஒருமுறைதான் நல்ல தண்ணீர் கிடைப்பதாகவும், சிறுவாணி அணையில் நீர் இல்லாததுதான் காரணம் என்று அரசு கூறுவதாகவும் வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டினார். "சிறுவாணி அணையைத் தூர்வாருவதற்கு அல்லது நீர்மட்டத்தை அதிகரிக்க கேரள அரசுடன் பேச ஏன் தயங்க வேண்டும்? கேரளா அரசாங்கத்தை நடத்துவது உங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் தானே?" என கேள்வி எழுப்பினார். நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் எண்ணம் திமுக அரசுக்கு இல்லை எனவும், இதுவே 'திராவிட மாடல்' எனவும் அவர் விமர்சித்தார்.

கூட்டணி மற்றும் அரசியல் விமர்சனம்:

"திமுகவுக்கு எதிராக யார் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் எண்ணம்" என கூட்டணி குறித்து வானதி சீனிவாசன் பேசினார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது குறித்து பேசிய அவர், "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் ரசிகர்கள் கூட்டத்தை தொண்டர்களாக மாற்றாவிட்டால் எந்தப் பயனும் இல்லை" என்றார். மீனவர் பிரச்சனை குறித்து விஜய் பேசியதை விமர்சித்த அவர், "விஜய் பேசுவது வெறும் வசனம். அதன் பின்னணியில் உள்ள உண்மைத் தகவல்கள் அவருக்குத் தெரியவில்லை" என்று சாடினார்.

வாக்காளர் பட்டியல் மற்றும் பணம்:

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என வானதி சீனிவாசன் மறுத்தார். "இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, முகவரி மாறியவர்களின் பெயர்களை நீக்குவது எனத் தேர்தல் ஆணையம் வழக்கமான நடைமுறையைத்தான் பின்பற்றுகிறது" என்றார். பணம் கொடுத்து வாக்கு வாங்குவது, பணம் பெற்று வாக்கு போடுவது ஆகிய இரு செயல்களும் தடுக்கப்பட வேண்டும் என்றும், இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.