அரசியல்

சென்னை மாநகர மேயரை மதிக்காத கவுன்சிலர்கள்- செம கடுப்பில் அறிவாலயம்!

மேயர் ப்ரியா தலைமையில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மாமன்றக் கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து வரும் செயல் குறித்து திமுக தலைமைக்கு புகார் சென்றுள்ளது.

சென்னை மாநகர மேயரை மதிக்காத கவுன்சிலர்கள்- செம கடுப்பில் அறிவாலயம்!
Chennai Councillors Disrespect Mayor; DMK Leadership Intervenes
சென்னை மாநகராட்சியில் 153 தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளனர். ஆனால், தொடர்ந்து மாமன்றக் கூட்டத்திற்கு வர ஆளும்கட்சி கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டவில்லை. அதுமட்டுமின்றி கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்களும், மக்கள் பிரச்னை குறித்துப் பேசாமல், சமூக வலைதளத்தில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் பேசுப்பொருளாகியுள்ளது.

கவுன்சிலர்களின் அதிருப்திக்கு என்ன காரணம்?

இதுகுறித்து ரிப்பன் மாளிகை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ’2022ம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் தி.மு.க 153 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணிக் கட்சிகளில் 25 கவுன்சிலர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான அதிமு.கவிற்கு 15 கவுன்சிலர்கள் உட்பட சுயேச்சை என 27 கவுன்சிலர்கள் உள்ளனர்.

தி.மு.கவின் 153 கவுன்சிலர்கள் உட்பட கூட்டணிக் கட்சி பலத்துடன் மேயராக ப்ரியா ராஜனும் துணை மேயராக மகேஷ் குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேயர் ப்ரியா தலைமையில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மாமன்றக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் கடந்த 30-ம் தேதி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை நிறைவேற்ற கடந்த சில மாதங்களாக ஆளும் தரப்பு படாதபாடு பட்டு வருகிறது.

கடந்த 30ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 200 கவுன்சிலர்கள் கலந்துகொள்ள வேண்டிய நிலையில் வெறும் 40 கவுன்சிலர்களே வந்திருந்தனர். இதனால் இருக்கைகள் காலியாக காட்சி அளித்த நிலையில் அரங்கமும் வெறிச்சோடியே காணப்பட்டது. கடந்த சில மாதங்களாக இதே போல பல உறுப்பினர்கள் பங்கேற்காமல் இருந்து வருகின்றனர். மேயர் ப்ரியா ராஜன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது இருக்கும் அதிருப்தி காரணமாக ஆளும் கட்சி கவுன்சிலர்கள் பெரும்பாலோனார் மாமன்றக் கூட்டத்தை புறக்கணித்து வருகின்றனர். இதனால், ஆளும் கட்சி கவுன்சிலர்கள் மட்டுமல்லாது அனைத்து கவுன்சிலர்களும் காலை 10 மணிக்குள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்' என மேயர் ப்ரியா மற்றும் துணை மேயர் மகேஷ் ஆகியோர் கவுன்சிலர்களுக்கு உத்தரவிட்டு இருந்தனர். ஆனால், அதையும் அவர்கள் மதிக்கவில்லை.

வந்திருந்த கவுன்சிலர்களும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மேயர் பேசுவதை கவனிக்காமல் செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், 'மாமன்றக் கூட்டத்தில் செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும்' என திமுக கவுன்சிலர்கள் குழுத் தலைவர் ராமலிங்கம் மேயர் ப்ரியாவிடம் கோரிக்கை வைத்தார்.

மேலும், 2006-2011 காலகட்டத்தில் மன்றத் கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதே போன்று இனி வரும் நாட்களில் உறுப்பினர்கள் செல்போன் கொண்டு வருவதை கண்காணிக்க வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார். அப்போது பேசிய துணை மேயர் மகேஷ்குமார், 'மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கூட்டத்தில் செல்போன்களை தவிர்க்க வேண்டும்' என உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. கவுன்சிலர் ஒருவரிடம் பேசினோம். "வார்டுகளில் 1 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள பணிகளுக்கு மாநகராட்சி ஒப்புதல் பெற வேண்டியது இல்லை. மண்டல அளவில் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு, மாநகராட்சிக் கூட்டத்தில் வைத்துதான் சிறு சிறு பணிகளுக்குக்கூட ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.

இப்படி ஒப்புதல் கொடுக்கப்படும் சிறு சிறு பணிகளும்கூட மேலிடம் சொல்லும் ஒப்பந்ததாரருக்கே கிடைக்கிறது. இதனால் கவுன்சிலர்களுக்கு வருமானமே இல்லை. ஆனால், கட்சி நிகழ்ச்சி, முதல்வர், துணை முதல்வர் பிறந்தநாள் என தொடர்ந்து செலவு செய்ய வேண்டியுள்ளது. புதிதாக வீடு கட்டுபவர்கள், குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு புதிதாக கேட்பவர்களிடம் பணம் கேட்டுச் சென்றாலும், கட்சி மேலிடத்திற்கு புகார் கூறி நடவடிக்கை எடுத்துவிடுகின்றனர். இதனால் கடன் வாங்கி தான் செலவு செய்ய வேண்டி உள்ளது.

இன்னும் 2 ஆண்டில் தேர்தல் வந்தால், எந்த பணிகளை சொல்லி ஓட்டுக் கேட்க முடியும். தூய்மைப் பணிக்கு ஆட்கள் மிகக் குறைவு. இதனால், குப்பை அள்ளும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளின் மெத்தனப் போக்கால்தான் கவுன்சிலர்கள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாகத் தான் ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கு ஒரு பிடிமானம் இல்லாமல் போய்விட்டது. கவுன்சிலருக்கு உண்டான மரியாதை இப்போது சுத்தமாக இல்லை. மாமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை சொன்னாலும் அதற்கு தீர்வு காணப்படுவது கிடையாது. இதனால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறோம். எனவே, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை" என்றார்.

திமுக தலைமை நடவடிக்கை

இந்த விவகாரத்தை மேயர் தரப்பு திமுக தலைமையிடம் கொண்டு சென்றுள்ளது. ஆப்சென்ட் ஆன கவுன்சிலர்களை போனில் அழைத்து திமு.க. இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை வார்னிங் கொடுத்து வருகிறாராம். 'ஜூலை மாத மாமன்றக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என்ற தலைமையின் உத்தரவையும் சொல்லியிருக்கிறாராம்.

(கட்டுரை: ரய்யான்பாபு / குமுதம் ரிப்போர்ட்டர் / 08.07.2025)