தமிழ்நாடு

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!
Perungavikko VaMu Sethuraman Passes Away
சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன். பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் மற்றும் தமிழ் உரிமை செயற்பாட்டாளர். நேற்று இரவு மூச்சு திணறலாக உள்ளது என தனது உதவியாளரும், பாடகருமான நந்தா என்பவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். உடனே அவர் வ.மு சேதுராமனை ஆட்டோ மூலம் விருகம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மருத்துவர்கள் இதயத்துடிப்பு மிகவும் குறைவாக உள்ளதால் விருகம்பாக்கத்தில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கு அழைத்து சென்ற போது வ.மு சேதுராமனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.

உயிரிழந்த வ.மு.சேதுராமனுக்கு வயது 91. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. வ.மு.சேதுராமனுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ள நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் விருகம்பாக்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடலை வைத்திருக்க போவதாகவும், நாளை மறுநாள் வ.மு.சேதுராமன் அவர்களின் கடைசி ஆசையின்படி அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஆண்டநாயகபுரம் கிராமத்திற்கு உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்யப் போவதாகவும் குடும்பத்தார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி, ஐயப்பன் அருள்கவி, கவிஞர் குலத் திலகம், செந்தமிழ்க் கொண்டல் போன்ற பட்டங்கள் வ.மு.சேதுராமனுக்கு வழங்கபட்டுள்ளன. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் சேதுராமனுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் திருவள்ளுவர் விருது இவருக்கு வழங்கபட்டது. தினத்தந்தி பத்திரிக்கை சார்பாக இவருக்கு ‘சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழ்அறிஞர் ‘‘விருது’’ 2015ம் ஆண்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றவர் வ.மு.சேதுராமன். நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேது காப்பியம் உள்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளாா். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதிய பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் மறைவு இலக்கிய உலகிற்கு மாபெரும் இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.