அரசியல்

கரூர் சம்பவம்: பாஜக அமைத்தது 'கலகக் குழு'- செல்வப்பெருந்தகை தாக்கு!

"கரூர் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. அமைத்த உண்மை அறியும் கலகத்தை ஏற்படுத்துவதற்காக அமைத்தது" என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

கரூர் சம்பவம்: பாஜக அமைத்தது 'கலகக் குழு'- செல்வப்பெருந்தகை தாக்கு!
Selvaperunthagai
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியில் புனரமைக்கப்பட்ட காமராஜர் சிலையை, அவரது 50-வது நினைவு நாளை ஒட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மற்றும் பா.ஜ.க.வின் உண்மை அறியும் குழு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அரசு ஆணையம் Vs பா.ஜ.க.வின் கலகக் குழு

பா.ஜ.க. அமைத்த உண்மை அறியும் குழுவிற்கும் தமிழ்நாடு அரசு நியமித்த ஒருநபர் ஆணையத்திற்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன என்று செல்வப் பெருந்தகை தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீதி பரிபாலனத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஒருநபர் ஆணையத்தை அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அவர், "தமிழ்நாடு அரசு நியமித்த ஒருநபர் ஆணையம் உண்மையை தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லக்கூடிய ஆணையம் ஆகும். ஆனால், பா.ஜ.க. அமைத்த உண்மை அறியும் குழு என்பது கலகத்திற்காக ஏற்படுத்தப்பட்ட குழு" என்று விமர்சித்தார். ஹேமமாலினி, அனுராக் தாகூர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட இந்தக் குழு பற்றியும், அனுராக் தாகூர் பற்றியும் மக்களுக்குத் தெரியும் என்று அவர் தெரிவித்தார்.

ஹேமமாலினி வந்தவுடனே தி.மு.க.வின் மீதும், காவலர்கள் மீதும்தான் குற்றம் என்று பேசுவதாகவும், "அவருக்குக் கரூரில் கிழக்கு தெரியுமா, மேற்கு தெரியுமா?" என்றும் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பினார்.

முதல்வரின் நடவடிக்கை மனிதநேயம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணப் பணிகளைச் செய்த விதத்தைப் பாராட்டிய செல்வப் பெருந்தகை, "ஒரு முதலமைச்சர், எழுபது வயதைக் கடந்தவர், விடிய விடிய இந்த நிவாரணப் பணியைச் செய்ய முடியுமா?" என்று வினவினார். முதலமைச்சர் தனது குடும்பத்தில் ஒருவர் இறந்ததைப் போல நடந்துகொண்டார் என்றும், இதை அனைவரும் பாராட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முதலமைச்சர் செய்வது தமிழ்நாட்டு மக்கள் மீது வைத்திருக்கின்ற பற்றும் பாசமும் தான், இது அரசியல் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

கரூர் விவகாரத்தில் ஒருவர், 'பிணத்தின் மீது அரசியல் செய்கிறார்கள், இவர்களைக் காரித் துப்ப வேண்டும்' என்று தன்னைக் கூறியதாகச் செல்வப் பெருந்தகை தெரிவித்தார். மேலும், கரூர் விவகாரத்தில் அரசியல் தேவையில்லை, அனுதாபம்தான் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

விசாரணை ஆணையம் குறித்து விளக்கம்

கரூர் விவகாரத்திற்கு அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் இதற்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்விற்கும் ஆணையத் தலைவராக இருந்தார் என்று அவர் நினைவூட்டினார். அருணா ஜெகதீசன், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டவர் தான் என்றும், அவர் மீது வைத்த அதே நம்பிக்கையைத்தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் வைத்திருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

இதே போன்ற சம்பவங்களுக்கு ஆணையம் மட்டுமே அமைக்கப்படுகிறது என்ற கேள்விக்கு, "உங்களிடம் ஏதேனும் யோசனைகள் இருந்தால் சொல்லுங்கள், அதை நான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வலியுறுத்துகிறேன்" என்றும் செல்வப் பெருந்தகை பதிலளித்தார்.

பா.ஜ.க.வின் அரசியல்

கும்பமேளாவில் இறந்தவர்களுக்கு பா.ஜ.க. சார்பில் ஏதேனும் குழு அமைத்தார்களா என்றும், மணிப்பூர் கலவரத்தில் பல பழங்குடியினப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு ஏதேனும் குழு அமைத்தார்களா என்றும் கேள்வி எழுப்பினார். ஒரு வருடமாகக் கூடப் பிரதமரே சம்பவ இடத்திற்குச் செல்லவில்லை என்றும், ஆனால் தமிழ்நாட்டிற்கு ஏன் அனுப்புகிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் கலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் என்றும் அவர் கூறினார்.