அரசியல்

பாஜக-அதிமுக கூட்டணி? – முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் அமித்ஷா

2 நாள் பயணமாக சென்னை வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் பாஜக- அதிமுக கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக-அதிமுக கூட்டணி? – முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் அமித்ஷா
அமித்ஷா சென்னை வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை வந்தார். அவரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அவர் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தேர்வு, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி வியூகம் ஆகியவை குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஒரு சில தலைவர்களை மட்டும் அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், ஆனால் சந்திப்பு உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க இதுவரை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

அமித்ஷா-இபிஎஸ் சந்திப்பு


இந்த நிலையில், கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அமித்ஷா நண்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது, 2026 சட்டமன்றத்தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2016 முதல் தனித்து போட்டியிட்டு, 2024 மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்ற பெற்ற நாம் தமிழர் கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் 2026 சட்டமன்றத்தேர்தலிலும் நா.த.க தனித்தே போட்டியிடும் என்ற சீமான் தெரிவித்துள்ளார். இதுவரை 30க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார்.

சீமானுக்கு அழைப்பு?

கடந்த வாரம் சென்னை வந்த நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்ததாக தகவல் பரவிய நிலையில், இன்று அமித்ஷா-சீமான் சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக விழாவில் பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலை மற்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது நடந்த விழா நிகழ்ச்சியில் அண்ணாமலை மற்றும் சீமான் ஒருவரையொருவர் புகழ்ந்து பேசினர்.

பின்னர் 2026 சட்டமன்ற தேர்தல், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பயணிப்பது உள்ளிட்டவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான சந்திப்பு குறித்து சீமான் மறுப்பு தெரிவித்தார். தான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என விளக்கம் அளித்திருந்தார். ஆகையால் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்த விவரங்கள் தெரியவரும்.