அரசியல்

இபிஎஸ் தலைமை இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது- டிடிவி தினகரன் விமர்சனம்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கும் வரை, அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இபிஎஸ் தலைமை இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது- டிடிவி தினகரன் விமர்சனம்!
TTV Dhinakaran
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கும் வரை, அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். திமுகவின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் கருத்து

இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு அருமையான கருத்தைச் சொல்லியிருக்கிறார். 'எங்களது வெற்றியின் ரகசியமே பழனிசாமிதான். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்க வேண்டும். அவர் 100 ஆண்டுகள் வாழ வேண்டும். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் வெற்றி எங்களுக்கு சுலபம்' என்று கூறுகிறார்" என்றார்.

டிடிவி தினகரன் விமர்சனம்

தொடர்ந்து பேசிய தினகரன், "தி.மு.க.வுக்கு கூட்டணி பலம் இருந்தாலும், பழனிசாமிதான் அவர்களது வெற்றியின் ரகசியம் என்பதை உதயநிதி ஸ்டாலின் போட்டு உடைத்துவிட்டார். அவர் இதைச் சிலேடையாகச் சொல்லியிருந்தாலும், வஞ்சப் புகழ்ச்சியாகச் சொல்லியிருந்தாலும் அவர் சொன்னது உண்மைதான். இதை ஜெயலலிதாவின் தொண்டர்கள் மற்றும் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சுயநலமும் துரோகச் சிந்தனையும் கொண்ட பழனிசாமி, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருக்கும்வரை அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதுதான் உண்மை" என்று கடுமையாக விமர்சித்தார்.