அரசியல்

விஜய் பின்னால் இளைஞர்கள் செல்வது போன்ற மாயத்தோற்றம்-ராஜேந்திர பாலாஜி

தற்போது அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய் பின்னால் அனைத்து இளைஞர்களும் செல்வது போன்ற மாயத்தோற்றம் உருவாகியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

விஜய் பின்னால் இளைஞர்கள் செல்வது போன்ற மாயத்தோற்றம்-ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, "தற்போது அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய் பின்னால் அனைத்து இளைஞர்களும் செல்வது போன்ற மாயத்தோற்றம் உருவாகியுள்ளது. அது உண்மையல்ல. தற்போது அதிமுகவுக்கு பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக படித்த இளைஞர்கள் மற்றும் படித்த பெண்கள் அதிக அளவு இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

அதை நாம் பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கு முறையான வாய்ப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் படித்தவர்கள், பண்புள்ளவர்கள் மத்தியில் பேசப்படக் கூடியது நாட்டுக்கான தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்பதே. அதிமுகவில் இணைய வேண்டும் என்ற எண்ணம் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் உள்ளது. எனவே இளைஞர்களுக்கு மூத்த தொண்டர்கள் வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று பேசினார்.