அரசியல்

“இபிஎஸ் கூறுவது நம்பத்தகுந்தது அல்ல” – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்சினைகளை மத்திய அரசிடம், அமைச்சர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியது கிடையாது என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் சாடல்

 “இபிஎஸ் கூறுவது நம்பத்தகுந்தது அல்ல” – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்
சிபிஐஎம் மாநில செயலாளர் சண்முகம்
போராட்டத்திற்கு ஆதரவு

திண்டுக்கல்லுக்கு இன்று வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற மே மாதம் 20ம் தேதி பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க உள்ளது.

அதேநேரம் 20ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் திமுக பங்கேற்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு மக்கள் 20ஆம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பிரதமர் கலந்து கொள்ளாதது சரியல்ல

பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் என்பது வன்மையாக கண்டனத்திற்குரியது.அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டது என்பது சகித்துக்கொள்ள முடியாது. தீவிரவாதிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். இரண்டு அனைத்துக்கட்சி கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளாதது சரியல்ல. கூட்டத்தை கூட்டியது மத்திய அரசு அதனுடைய தலைவர் பிரதமர் மோடி, அவரே அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது ஏன் என்று தெரியவில்லை. அதைவிட முக்கியமான வேறு வேலை என்னவென்று தெரியவில்லை.


இபிஎஸ் கருத்து நம்பத்தகுந்தது அல்ல

அதேநேரம் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றை மாநில அரசு கட்டி உள்ளது. இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எனவே அரசின் அணுகு முறையில் மாற்றம் வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றால், மாற்று ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது 100 நாள் வேலை திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதின் பேரில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது என கூறியது குறித்த கேள்விக்கு, மத்திய அரசு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கான நிதிகளை குறைப்பது, வேலை நாட்களை குறைப்பது போன்ற புதிய பல்வேறு இடர்பாடுகளை உருவாக்கி வருகிறது. என்னென்ன செய்து இந்த திட்டத்தை முடக்க முடியுமோ அதனை மத்திய அரசு செய்து வருகிறது. அதன் காரணமாகத்தான் தமிழகத்திற்கு தரவேண்டிய 4,000 கோடியில் தற்பொழுது 2,999 கோடி நிதியை பல கட்ட போராட்டங்கள், முதலமைச்சர் கடிதம் எழுதிய பிறக்கும், நிதி அமைச்சர் நேரில் சந்தித்த பிறகு தற்பொழுது ஒதுக்கீடு செய்துள்ளனர்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி அமிர்தஷாவை நேரில் சந்தித்த பிறகு தமிழகத்திற்காக நான் இன்னென்ன கோரிக்கை வைத்துள்ளேன் என கூறவில்லை, ஆனால், நிதி ஒதுக்கீடு செய்த பின்பு நான் கேட்டுக் கொண்டதினால் தான் நிதி ஒதுக்கீடு செய்தனர் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசிடம், மத்திய உள்துறை அமைச்சரிடம் எடப்பாடி பழனிசாமி எப்பொழுதும் பேசியது கிடையாது. தமிழ்நாட்டுக்கு விரோதமான நிலைப்பாட்டை தான் அதிமுக எடுத்துள்ளது. பிஜேபியோடு உறவாக இருந்த காலத்திலும் சரி பிரிந்த காலத்தில் சரி தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டத்தான் எடுத்துள்ளனர். தற்பொழுது அவர் கூறும் கருத்து நம்பத்தகுந்தது அல்ல” என தெரிவித்தார்.