இந்தியா

இந்தியில் தான் பேச வேண்டும்.. கண்டிஷன் போட்ட பெண்.. சரமாரியாக சாடிய பயணி

கொல்கதா மெட்ரோ ரயிலில் சக பயணியை பெண் ஒருவர் இந்தியில் பேச வலியுறுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியில் தான் பேச வேண்டும்.. கண்டிஷன் போட்ட பெண்.. சரமாரியாக சாடிய பயணி
மெட்ரோ ரயிலில் சக பயணியை பெண் ஒருவர் இந்தியில் பேச வலியுறுத்திய வீடியோ வைரல்

கொல்கத்தா மெட்ரோ ரயிலில் பெண் பயணி ஒருவர் பெங்காலியில் பேசியுள்ளார். அப்போது சக பயணி ஒருவர் இந்தியில் பேசுமாறு அவரை வலியுறுத்தியுள்ளார். மேலும், மேற்கு வங்கம் இந்தியாவின் ஒரு பகுதியாகும், அதனால் நீங்கள் கண்டிப்பாக இந்தியும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சாடியுள்ளார். 

தொடர்ந்து, இந்தியாவில் வாழ்ந்து வரும் உங்களுக்கு பெங்காலி தெரிகிறது.. இந்தி தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெங்காலி மொழி பேசும் பயணி, ‘நான் மேற்கு வங்கத்தில் என் கிராமத்தில் வசித்து வருகிறேன். உங்கள் கிராமத்தில் வசிக்கவில்லை, அதனால் நீங்கள் என்னை பெங்காலி பேசுவதற்காக அவமதிக்க முடியாது’ என்று தெரிவித்தார். 

இருவருக்கும் இடையே பிரச்சனை முற்றிய நிலையில் சக பயணிகள் பெங்காலி தெரியாத பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ‘இந்த மெட்ரோ ரயில் உங்களுடைய  மட்டுமல்ல, எங்களுடையதும் தான். நீங்கள் வரி செலுத்துவதினால் மட்டும் மெட்ரோ ரயில் இயங்கவில்லை. நாங்களும் இதற்கான வரியை செலுத்துகிறோம்’ என்று வாக்குவாதம் செய்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், இந்தி பேசுவது தொடர்பாக பயணி வாக்குவாதம் செய்ததற்கு நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் 44 சதவீதம் மட்டுமே இந்தி பேசுகின்றனர். ஆனால், பலர் அனைவரும் இந்தி பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது மிகவும் குறுகிய மனநிலை என்று தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக இந்தியாவில் இந்தி மொழி திணிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மத்திய அரசு வேலை முதல் உள்ளூர் பாடத்திட்டம் முதற்கொண்டு அனைத்திலும் இந்தி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் நினைப்பதாகவும் இதற்கு மக்கள் பலர் ஆதரவு தெரிவித்து செயல்படுத்தி வருவதாகவும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.