பொதுவாக வெளியூர் செல்லும் பயணிகள் கூகுள் மேப் உதவியுடனே பயணித்து வருகின்றனர். பல நேரத்தில் சரியான வழியை காட்டும் கூகுள் மேப் சில நேரத்தில் சதி செய்துவிடுகிறது.
அதாவது, கூகுள் மேப்பில் சில வழிகளின் தற்போதைய நிலை குறித்து எந்த அப்டேட்டும் இல்லாததால் கூகுள் மேம்பை நம்பி பயணிக்கும் பயணிகள் சில நேரங்களில் ஆபத்தில் சிக்கிவிடுகின்றனர்.
சமீபத்தில், கேரளாவில் பயணிகள் சிலர் கூகுள் மேப் உதவியுடன் பயணம் மேற்கொண்டனர். அப்போது ஒரு கட்டத்தில் தவறான வழியை கூகுள் மேப் காட்டியதாக கூறப்படுகிறது. இதை அறியாத பயணிகள் அந்த பாதையில் பயணித்த நிலையில் ஒரு ஆற்றிக்குள் காருடன் மூழ்கினர். இதனை பார்த்த அங்கம் பக்கத்தினர் பயணிகளை மீட்டதுடன் காரினையும் மீட்டனர். இப்படி பல சம்பவங்கள் அண்மை காலமாக அரங்கேறி வருகிறது. இந்த தவறான வழிகாட்டுதலில் அதிர்ஷ்டவசமாக பலர் தப்பித்தாலும், சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தற்போது இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, குருகிராமிலிருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக மூன்று இளைஞர்கள் காரில் பரேலி (Bareilly) மாவட்டத்தை நோக்கி சென்றுள்ளனர். கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் ஃபரித்பூரில் (Faridpur) உள்ள பழுதடைந்த பாலத்தின் மீது கார் ஏறி 50 அடிக்கு கீழே ஓடும் நதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதையடுத்து ராமகங்கா ஆற்றில் சேதமடைந்த காரை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஃபரித்பூரில் உள்ள பாலம் பழுதடைந்துள்ளது. இதையடுத்து பழுது ஏற்பட்ட இடத்தில் தடுப்புகள், பதாகைகள் என எந்தவித பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளாமல் அரசு அலட்சியமாக செயல்பட்டதாகவும், மெத்தன போக்குடன் செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பொதுப்பணித்துறையில் பணிப்புரியும் இரண்டு உதவி பொறியாளர்கள் மற்றும் இரண்டு ஜூனியர் பொறியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கூகுள் மேப் நிறுவனத்தின் பிரதிநிதியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிப்போம் என்று என்று கூகுள் மேப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.