இந்தியா

Viral Video: போட்டோ எடுத்தவுடன் கொடுத்த பிஸ்கட்டை பறித்த பாஜக பெண் தொண்டர்!

ராஜஸ்தானில் பாஜக பெண் தொண்டர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்குப் பிஸ்கட் கொடுத்து, புகைப்படம் எடுத்த பிறகு அதை திரும்பப் பெறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Viral Video: போட்டோ எடுத்தவுடன் கொடுத்த பிஸ்கட்டை பறித்த பாஜக பெண் தொண்டர்!
Rajasthan BJP
ராஜஸ்தான் மாநிலத்தில், பா.ஜ.க. பெண் தொண்டர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள ஒரு புற்றுநோய் நோயாளிக்குப் பிஸ்கட் கொடுத்து, புகைப்படம் எடுத்த பிறகு அந்தப் பாக்கெட்டைத் திரும்பப் பெறுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 20 வினாடிகள் ஓடும் இந்த காணொலி இணையத்தில் விவாதத்தைத் ஏற்படுத்தியுள்ளது.

வைரல் வீடியோவின் முழு விவரம் என்ன?

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பா.ஜ.க.வின் ‘சேவா பக்வாடா’ (சேவைப் பதினைந்து நாட்கள்) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது கடந்த செப்டம்பர் 23 அன்று சாங்கானேர் சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள ஷியோபூர் மண்டலத்தின் சார்பில் RUHS மருத்துவமனையின் 103- வது வார்டில் நடைபெற்றது.

உள்ளூர் பா.ஜ.க. தலைவர்களும் தொண்டர்களும் இங்கு புற்றுநோய் நோயாளிகளுக்குப் பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கினர். வைரலான காணொலியில், பா.ஜ.க. பெண் தொண்டர் ஒருவர் ஒரு நோயாளிக்குப் பிஸ்கட் பாக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அதற்குப் பிறகு, அவர் அந்தப் பாக்கெட்டை நோயாளியிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டு அடுத்த நோயாளிக்குச் சென்றுவிடுகிறார்.

'தவறான கோணத்தில்' பரப்பப்பட்ட வீடியோ

இந்தக் காணொலி வைரலான பிறகு, பா.ஜ.க. தரப்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஷியோபூர் மண்டலத் தலைவர் கோபால் சைனி, இந்தச் சம்பவத்தை ஒரு அரசியல் சதி என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கோபால் சைனி அளித்த விளக்கத்தில், இந்தக் காணொலி வேண்டுமென்றே தவறான கோணத்தில் பரப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். நோயாளியின் அருகில் ஏற்கெனவே ஒரு பிஸ்கட் பாக்கெட் வைக்கப்பட்டு இருந்தது என்றும், பா.ஜ.க. தொண்டர் இரண்டாவது பாக்கெட்டைக் கொடுக்க முயன்றபோது, நோயாளி வாங்க மறுத்துவிட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொண்டர் பாக்கெட்டைத் திரும்ப எடுக்கும் பகுதி மட்டுமே வைரலாக்கப்பட்டுள்ளதால், மக்களிடையே தவறான செய்தி பரவி வருகிறது என்றும் பா.ஜ.க. தலைவர்கள் கூறியுள்ளனர்.

காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு

இந்தக் காணொலியை காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையவர்கள் தான் வேண்டுமென்றே வைரலாக்கி, பா.ஜ.க.வின் ‘சேவா பக்வாடா’ பிரச்சாரத்தைக் களங்கப்படுத்த முயற்சி செய்வதாக கோபால் சைனி குற்றம் சாட்டியுள்ளார்.