இந்தியா

மகாராஷ்டிரா பள்ளியில் விபரீதம்: 8-ஆம் வகுப்பு மாணவி 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

மகாராஷ்டிரா மாநிலத்தில், 8-ஆம் வகுப்பு மாணவி, பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா பள்ளியில் விபரீதம்: 8-ஆம் வகுப்பு மாணவி 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
Class 8 girl jumps to death in Maharashtra
மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில், 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி ஒருவர் தனது பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் மற்றும் காவல்துறை விசாரணை

மகாராஷ்டிரா மாநிலம், ஜால்னாவில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் அந்த மாணவி பயின்று வந்துள்ளார். மாணவி இன்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த நிலையில், மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவியின் தந்தைக்குத் தகவல் அளித்தது. இதனைத்தொடர்ந்து, மாணவி முதலில் ஒரு தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழப்புக்கான காரணத்தை அறிய மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பிவைத்துள்ளனர். மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் ஆய்வு செய்து பள்ளி நிர்வாகம், மாணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையின் குற்றச்சாட்டு

இந்தச் சூழலில், மாணவியின் தந்தை தனது மகள் இந்த முடிவை எடுக்கக் காரணம், ஆசிரியர்களால் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தப்பட்டதுதான் என்று குற்றம் சாட்டியுள்ளார். "தனது மகள் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், ஆனால் இது இவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

"எங்களுக்கு நீதி வேண்டும். இதற்குப் பொறுப்பான பள்ளி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்றும், நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் குழந்தைக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். பள்ளியின் முதல்வர் இது ஒரு துயரமான சம்பவம் என்று கூறியுள்ளதுடன், நிர்வாகம் விசாரணையாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).