இந்தியா

வீடு திரும்ப பைக் திருடிய நபர்.. விடுதலையான 3 நாட்களில் மீண்டும் சிறை!

கேரளாவில் சிறையில் இருந்து விடுதலையான நபர், வீட்டுக்கு செல்ல பைக்கை திருடியதால் போலீசார் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

வீடு திரும்ப பைக் திருடிய நபர்.. விடுதலையான 3 நாட்களில் மீண்டும் சிறை!
Thief who stole bike to return home, back in jail 3 days after release
கேரள மாநிலம், கண்ணூர் மத்திய சிறையிலிருந்து விடுதலையான பாபுராஜ் என்பவர், வீட்டுக்கு செல்ல பேருந்து கிடைக்காததால் பைக்கை திருடியுள்ளார். இதனால் போலீசார் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து விடுதலை- பைக் திருட்டு

த்ரிசூரைச் சேர்ந்த 45 வயதான பாபுராஜ், 18 திருட்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர். இரண்டு வருட சிறைவாசத்திற்குப் பிறகு, கண்ணூர் மத்திய சிறையிலிருந்து விடுதலை ஆனார். வெளியே வந்ததும், அவர் நேராக கண்ணூர் டவுன் காவல் நிலையத்திற்குச் சென்று, அங்கு இருந்த போலீசாரிடம், புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போவதாகவும், இந்த வாழ்க்கைக்கு உதவிய போலீசாருக்கு நன்றி சொல்ல வந்ததாகவும் கூறியுள்ளார். அவரது 'மனமாற்றத்தைக்' கண்டு வியந்த போலீசார், அவரைப் பாராட்டி, நல்ல முறையில் வாழும்படி அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர்.

வீடு திரும்புவதற்காகப் பேருந்து கிடைக்காததால், பாபுராஜ் அருகில் இருந்த ஒரு மதுபானக் கடைக்குச் சென்றுள்ளார். பின்னர், வெளியே வந்தபோது, எஸ்.என். பூங்கா அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளைப் பார்த்துள்ளார். அதைத் திருடி, த்ரிசூருக்குச் சென்றுள்ளார்.

மீண்டும் கைதான திருடன்

மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பி.கே. சனுஜ், தனது பைக் திருடு போனதைக் கண்டுபிடித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், திருடியது பாபுராஜ் என்பதைக் கண்டறிந்தனர். மோட்டார் சைக்கிளில் கோழிக்கோடு வரை சென்ற பாபுராஜ், பெட்ரோல் தீர்ந்ததால், அதை அங்கேயே விட்டுவிட்டு, ஒரு டேங்கர் லாரியில் ஏறி த்ரிசூருக்குச் சென்றுள்ளார்.

பின்னர், போலீசார் தேடிச் சென்று பாபுராஜைக் கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், சிறையில் இருந்து விடுதலையான பிறகு, வீட்டிற்கு செல்ல பேருந்து கிடைக்காததால் இரு சக்கர வாகனத்தை திருடியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சிறையிலிருந்து விடுதலையான மூன்று நாட்களில், அவர் மீண்டும் சிறைக்கே திரும்பியுள்ளார்.