இந்தியா

6 பானி பூரிக்குப் பதிலாக 4 மட்டுமே தந்ததால் போராட்டம்: குஜராத்தில் நடந்த விநோதச் சம்பவம்!

பானிபூரி குறைவாக கொடுத்ததால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் நகைச்சுவையான கருத்துக்களை பெற்று வருகிறது.

6 பானி பூரிக்குப் பதிலாக 4 மட்டுமே தந்ததால் போராட்டம்: குஜராத்தில் நடந்த விநோதச் சம்பவம்!
Woman Protests for PaniPuri
குஜராத் மாநிலம் வதோதராவில், ரூ.20-க்கு 6 பானி பூரிக்கு பதிலாக 4 மட்டுமே கொடுத்ததால், ஆத்திரமடைந்த பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் நகைச்சுவையான கருத்துக்களை பெற்று வருகிறது.

வதோதராவில் உள்ள சூர சாகர் ஏரி அருகே உள்ள ஒரு பானி பூரி கடைக்கு வந்த பெண் ஒருவர், ரூ.20 கொடுத்து பானி பூரி வாங்கியுள்ளார். ஆனால், கடைக்காரர் 6 பூரிகளுக்கு பதிலாக 4 பூரிகளை மட்டுமே கொடுத்ததால், அந்தப் பெண் கோபமடைந்தார். மேலும் இரண்டு பூரிகள் கேட்டபோது, கடைக்காரர் கொடுக்க மறுத்ததால், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

போலீசார் பேச்சுவார்த்தை

இந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சாலை மறியலை கைவிடும்படி அந்தப் பெண்ணிடம் கூறினர். ஆனால் அவர் கண்ணீர் விட்டு அழுது, ஒன்று மீதி இரண்டு பூரிகளைத் தர வேண்டும் அல்லது அந்தக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனத் தனது கோரிக்கையை முன்வைத்தார்.

ஒரு உள்ளூர் செய்தி சேனலுக்குப் பேட்டியளித்த அந்தப் பெண், "நான் எப்போதும் இந்த கடைக்குத்தான் பானி பூரி சாப்பிட வருவேன். சமீபகாலமாக, இவர் ரூ.20-க்கு 6 பூரிகளுக்குப் பதிலாக 4 பூரிகளை மட்டுமே தருகிறார். நான் கூடுதலாகக் கேட்டால் மிரட்டுகிறார்" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

காவல்துறையினர் நீண்ட நேரம் முயற்சிக்குப் பிறகு, அவரைச் சாலையிலிருந்து அப்புறப்படுத்திப் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி, நெட்டிசன்களின் நகைச்சுவையான கருத்துகளைப் பெற்று வருகிறது. அந்தப் பெண்ணுக்கு மீதமுள்ள இரண்டு பூரிகள் கிடைத்ததா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.