இந்தியா

Viral Video: தந்தூரி ரொட்டியில் பல்லி.. உணவகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

கான்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் தந்தூரி ரொட்டிக்குள் முழு பல்லி இருந்த காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Viral Video: தந்தூரி ரொட்டியில் பல்லி.. உணவகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
Shocked to find lizard in tandoori roti
உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் தந்தூரி ரொட்டிக்குள் முழு பல்லி இருந்த காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தந்தூரி ரொட்டியில் பல்லி

கான்பூர் ஜி.டி. சாலை நெடுஞ்சாலையில் உள்ள பாஜ்பாய் தாபா என்ற உணவகத்தில் இந்தக் காணொலி எடுக்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு வாடிக்கையாளர்கள், உணவக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். அப்போது, வாடிக்கையாளர் ஒருவர், அலுமினியத் தாளில் சுற்றப்பட்டிருந்த ரொட்டியைப் பிரித்துக் காட்டுகிறார். அதில், முழு பல்லி ஒன்று ரொட்டிக்குள் இருந்தது. அந்தப் பல்லியின் தலை ரொட்டியின் வெளியே தெரிவது காணொலியில் தெளிவாக உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்க நெட்டிசன்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும், மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உணவகங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, கான்பூரின் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் ஆய்வு நடத்தினர். "உணவகம் முழுவதும் அதிக அழுக்குகள் இருப்பதைக் கண்டறிந்தோம். தந்தூரி, பனீர் மற்றும் காய்கறிகளின் மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. உணவகம் உடனடியாகச் சீல் வைக்கப்பட்டது" என்று உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர் சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் நடவடிக்கை

இந்தச் சம்பவம் குறித்து இதுவரை முறையான புகார் எதுவும் வரவில்லை என்று உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணொலியைக் கண்டாலும், புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். சோனு பாஜ்பாய் என்பவரால் நடத்தப்படும் இந்த உணவகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.