இந்தியா

இந்தியாவின் முதல் தானியங்கி துறைமுகம்.. விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர்!

திருவனந்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, CPI(M), காங்கிரஸ் கட்சிகளை மறைமுகமாக சாடினார்.

இந்தியாவின் முதல் தானியங்கி துறைமுகம்.. விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர்!
கேரளாவின் அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் 8 ஆயிரத்து 867 கோடி ரூபாய் செலவில் விழிஞ்சம் துறைமுகத்தை அமைத்துள்ளது. நவீன வசதிகள் மூலம் மாதத்திற்கு சுமார் 1 லட்சம் சரக்கு கண்டெய்னர்களை கையாள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் எம்பி சசிதரூர், தொழிலதிபர் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, விழிஞ்சம் துறைமுகம் புது யுக வளர்ச்சியின் அடையாளம் எனவும் கடல் போல் நம்முன் வாய்ப்புகள் குவிந்துள்ளதாகவும் கூறினார். இந்தியா கூட்டணியின் வலுவான தூணாக இருக்கும் பினராயி விஜயன், சசி தரூர் ஆகியோரும் தன்னுடன் ஒரே மேடையில் இருக்கும் நிலையில், இன்றைய நாள் பலரின் தூக்கத்தைக் கெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து ஒரே மேடையில் இருந்த பினராயி விஜயன், சசிதரூர், சுரேஷ்கோபி ஆகியோருக்கு பிரதமர் மோடி வரிசையாக வாழ்த்து தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் பினராயி விஜயன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. துறைமுகத்துக்கு நேரில் சென்ற பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு அன்றாட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.