இந்தியா

பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியரின் இந்தியா வருகை..பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோசுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.

பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியரின் இந்தியா வருகை..பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!
பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியரின் இந்தியா வருகை..பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!
பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் ரோம்வால்டஸ் மார்கோஸ் ஜூனியர், ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகைதந்துள்ளார். இவர் அதிபராகப் பதவியேற்றதிலிருந்து இந்தியாவுக்கு வருகை தருவது இது முதல் முறையாகும். இந்தப் பயணம், இந்தியா-பிலிப்பைன்ஸ் தூதரக உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிபர் மார்கோஸுக்கு, டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், மரியாதை அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவரை நேரில் வரவேற்றனர்.

இருதரப்புப் பேச்சுவார்த்தை:

பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிபர் மார்கோஸ் முக்கியமான இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

டெல்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், அதிபர் மார்கோஸ் மலரஞ்சலி செலுத்த உள்ளார். டெல்லி பயணத்தைத் தொடர்ந்து அவர் பெங்களூரு நகருக்குச் சென்று, அங்குள்ள முன்னணி தொழில்துறை தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார முதலீடுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டாண்மை:

இந்தப் பயணத்தின் நிறைவில், முக்கிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். இருநாட்டு அதிகாரிகள் மற்றும் குழுக்களுக்கு இடையேயான மேலும் ஆழமான ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.

இந்திய-பிலிப்பைன்ஸ் உறவு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளதால், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள்குறித்து இருநாடுகளும் ஆலோசிக்கவுள்ளன.

இந்த அரசுமுறைப் பயணம், இருநாடுகளுக்கிடையிலான இணைந்து வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.