கடந்த 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் 27 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் எதிரொலியாக 48 சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி ஹாசிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ வீரர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்ற நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் அடுத்த ஒன்றரை நாட்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் பேட்டியளித்தார். தொடர்ந்து தெற்கு காஷ்மீரின் பாரக்வால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.
இந்திய பாதுகாப்புப் படைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எல்லையில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான கட்டுப்பாடுகள், நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என இந்த ஆலோசனையின் போது முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று டெல்லி இல்லத்தில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் தனித்தனியாக பிரதமர் ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி, நேற்று, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான், எல்லைப் பாதுகாப்பு படை, சிஆர்பிஎஃப், என்எஸ்ஜி படைகளின் தளபதிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், எப்படி, எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்தையும் ராணுவம் தீர்மானிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது.