இந்தியா

GPay, PhonePe பயனர்களுக்காக NPCI வெளியிட்ட புதிய மாற்றங்கள்.. இன்று முதல் அமல்!

Gpay, Phonepay போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

GPay, PhonePe பயனர்களுக்காக NPCI வெளியிட்ட புதிய மாற்றங்கள்.. இன்று முதல் அமல்!
GPay, PhonePe பயனர்களுக்காக NPCI வெளியிட்ட புதிய மாற்றங்கள்.. இன்று முதல் அமல்!
இந்தியாவை பொருத்தவரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் "யுபிஐ" (UPI – Unified Payments Interface) செயலிகள் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதில் இன்று (ஆகஸ்ட் 1) முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. பயனர்களுக்கு எளிதாகச் சேவையை வழங்கும் வகையில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பல மாற்றங்களை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது சில புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேலும் சீராகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதற்காக இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

யுபிஐ-ல் வந்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைப்படி, இன்று முதல் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்குப் பிறகும், வங்கிகள் பயனர்களுக்குப் பேலன்ஸ் குறித்த தகவலைத் தெரிவிக்க வேண்டும்.

ஒரு பயனர் தனது வங்கி கணக்கு இருப்பை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே UPI செயலிமூலம் சரிபார்க்க முடியும். அதேபோல், செயலியுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கின் தகவலை ஒரு நாளில் 25 முறைக்கு மேல் பார்க்க முடியாது.

ஒரே நேரத்தில் எண்ணற்றோர், செயலிகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் சர்வர் பாதிப்பைத் தடுக்கும் வகையில், இந்தக் கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.

ஒரு பணப்பரிமாற்ற நிலையை ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறைதான் அறிய முடியும். அதுவும் 90 வினாடிகளுக்குப் பிறகே மற்றொரு முறை முயற்சிக்க முடியும்.

வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே பணம் எடுப்பதற்கு அதாவது, இஎம்ஐ செலுத்துவது, கடன் தவணை பிடித்தம் போன்றவற்றிற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். அதாவது யுபிஐ பயனர்கள் தங்களது யுபிஐ செயலிகளில் ஆட்டோ டெபிட் அம்சத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது நெட்பிளிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட செயலிகளுக்கு ஆட்டோ டெபிட் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர்.

இந்த ஆட்டோ டெபிட் முறைக்கு நேர வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, காலை 10 மணிக்கு முன், மதியம் 1 மணி முதல் 5 மணி வர மற்றும் இரவு 9.30-க்கு பிறகு ஆகிய நேரங்களில் மட்டுமே பணம் பிடித்தம் செய்யப்படும். இதனால், வாடிக்கையாளர்கள் அவ்வப்போது அதனைப் பரிசோதிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

இதைத் தவிர, பணப்பரிமாற்றம் செய்வது மற்றும் தொகையில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. ஒருவர் அதிகபட்சமாக ஒரே பணப்பரிமாற்றத்தில் ரூ.1 லட்சம் வரைதான் செலுத்த முடியும், கல்வி அல்லது மருத்துவ சிகிச்சைக்காக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை என்றால் அதிகபட்சமாக ரூ.5 லட்சம்வரை பரிமாற்றம் செய்யலாம் என்ற விதிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் யாருக்காவது தவறாகப் பணம் அனுப்புகிறீர்கள், அதைத் திரும்பப் பெறும் 'Payment Reversal Request'-ஐ இன்று முதல் ஒரு மாதத்திற்கு 10 முறை மட்டுமே செய்ய முடியும். அதுவும் ஒருவருக்கே திரும்பத் திரும்பத் தவறாகப் பணம் அனுப்பப்பட்டிருந்தால், அவரிடமிருந்து அதிகபட்சமாக 5 முறை மட்டுமே ரிவர்சல் பேமென்ட் பெற முடியும்.

ஒரு வங்கிக்கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு நீங்கள் பணம் அனுப்புகிறீர்கள் என்றால், நீங்கள் பணம் அனுப்புவதற்கு முன்பு, அவருடைய வங்கியின் பெயர் உங்களுக்குத் தெரியும். இதன் மூலம் மோசடிகள் மற்றும் தவறுகளைத் தவிர்க்கலாம்.

இந்தப் புதிய மாற்றங்கள்மூலம், பணப்பரிமாற்றங்கள் வேகமாக நடைபெறும், பயன்பாட்டில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.