இந்தியா

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று காலமானார்.

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!
Nagaland Governor La.Ganesan passed away
நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80) இன்று மாலை காலமானார். தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் அண்மையில் சென்னை வந்திருந்தபோது, தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தார். கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அவருக்கு ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரித்ததால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.23 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் வாழ்க்கை

1945ஆம் ஆண்டு பிறந்த இல.கணேசன், சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது ஈர்க்கப்பட்டு, அதன் செயல்பாடுகளில் ஈடுபட்டார். பின்னர் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்ட இவர், தமிழக பா.ஜ.க.வின் தலைவராக உயர்ந்தார். மேலும், தேசிய செயலாளர், துணை தலைவர், ராஜ்யசபா உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளையும் வகித்தார்.

பா.ஜ.க.வின் நீண்டகால உறுப்பினராக இருந்த இல.கணேசன், கடந்த 2021ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தார். பின்னர், 2023ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.