இந்தியா

பேரலுக்குள் கணவன் சடலம்.. மாயமான மனைவி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வீட்டின் மாடியில் இருந்த நீல நிற பேரல் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரலுக்குள் கணவன் சடலம்.. மாயமான மனைவி!
Man's Body Found Rotting In A Drum In Rajasthan
ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில், பேரல் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீல நிற பேரலில் சடலம்

இந்தக் கொடூரச் சம்பவம் திஜாரா மாவட்டத்தின் ஆதர்ஷ் காலனி பகுதியில் நடந்துள்ளது. வீட்டின் உரிமையாளரான ஒரு வயதான பெண்மணி, முதல் தளத்திற்குச் சென்றபோது, அங்கிருந்து வந்த துர்நாற்றத்தால் சந்தேகம் அடைந்து, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் முதல் தளத்தில் ஒரு நீல நிற பேரலுக்குள் இருந்த அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டனர். அதன் மேல் துர்நாற்றம் வராமல் இருக்கப் பெரிய கல் ஒன்றை வைத்து மூடி, அதன் வாய் பகுதி சீல் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பேரலைத் திறந்தபோது, உடல் ஒரு படுக்கை விரிப்பில் சுற்றப்பட்டுக் கண்டெடுக்கப்பட்டது.

முதற்கட்ட தகவல்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் ஹன்ஸ்ராஜ் என்ற சூரஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், கிஷன்கர் பாஸ் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. அவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.

போலீசார் விசாரணை

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், "வீட்டின் கூரையில் இருந்த ஒரு நீல நிற பேரலுக்குள் இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஹன்ஸ்ராஜின் மனைவி மற்றும் குழந்தைகள் மாயமாகியுள்ளனர். தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது. போலீசார் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

உடல் எத்தனை நாட்களாக பேரலில் இருந்தது என்பது குறித்தோ, கொலைக்கான காரணம் குறித்தோ தற்போதுவரை தெரியவரவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.