இந்தியா

தலைநகரை புரட்டி போடும் கனமழை… விமான சேவை பாதிப்பு!

டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளது.

தலைநகரை புரட்டி போடும் கனமழை… விமான சேவை பாதிப்பு!
Red Alert for Delhi
டெல்லியில் நேற்று மற்றும் இன்று பெய்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாலைகள் நீரில் மூழ்கின

கனமழையால் டெல்லியின் பல முக்கிய சாலைகளும், தாழ்வான பகுதிகளும் நீரில் மூழ்கின. பஞ்ச்குயன் மார்க், மதுரா சாலை, பாரத் மண்டபத்தின் நுழைவாயிலில் உள்ள சாலைகள், சாஸ்திரி பவன், ஆர்.கே. புரம், மோதி பாக் போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், சாலைகள் ஆறுகள் போல் காட்சியளித்தன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விமானச் சேவைகளும் பாதிப்பு

கனமழை காரணமாக விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் விமானங்களைக் கண்காணிக்கும் இணையதளமான 'ஃப்ளைட்ரேடார்' தெரிவித்துள்ளது. இருப்பினும், விமான நிலையத்தின் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்வதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஸ்பைஸ்ஜெட் மற்றும் இன்டிகோ போன்ற விமான நிறுவனங்கள், பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளன.

வானிலை எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்லியில் இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளதால், பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை தொடர வாய்ப்புள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மழையால் காற்றுத் தரமும் மேம்பட்டுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, நேற்று டெல்லியின் காற்றின் தரக் குறியீடு (AQI) 116 ஆக 'மிதமான' (moderate) அளவில் இருந்தது
.