இந்தியா

கல்வி அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்- உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

பள்ளி தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கல்வி அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்- உத்தரபிரதேசத்தில் பரபரப்பு
உத்தரபிரதேசத்தில் பெண் ஆசிரியை புகார் குறித்து விசாரித்த கல்வி அதிகாரி மீது பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்
உத்தரபிரதேச மாநிலம், சீதாப்பூரில் ஒரு பள்ளி தலைமை ஆசிரியர், தன்னை பற்றி ஒரு ஆசிரியை கொடுத்த புகாருக்கு விளக்கம் அளிக்க, கல்வி அதிகாரி அகிலேஷ் பிரதாப் சிங் என்பவரின் அலுவலகத்திற்கு சென்றார்.

அதிகாரி மீது பெல்ட்டால் தாக்குதல்

அப்போது, அந்த ஆசிரியரின் விளக்கத்தில் திருப்தியடையாத அதிகாரி, அவரை கடிந்துகொண்டார். இதனால் கோபமடைந்த தலைமை ஆசிரியர், தான் வைத்திருந்த கோப்பை மேஜையில் ஓங்கி வீசினார். பின்பு, தனது பெல்ட்டை கழட்டி, அந்த அதிகாரியை பலமுறை தாக்கினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அந்த அதிகாரி, "சரியான விளக்கம் அளிக்காததால் அந்த தலைமை ஆசிரியரை நான் கடிந்துகொண்டேன். அதனால் கோபமடைந்த அவர், கோபமாக பெல்ட்டை கழட்டி எங்களை தாக்கினார்" என்றார்.

தலைமை ஆசிரியர் கைது

அந்த தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரியை பெல்ட்டால் குறைந்தது ஐந்து முறை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்பு, அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். அந்த தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரியை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் போலீசார் தலைமை ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெண் ஆசிரியை அளித்த புகார் மீது தலைமை ஆசிரியரிடம் கேள்வி எழுப்பிய, கல்வி அதிகாரி மீது தாக்குதல் நட்த்தப்பட்டுள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.