இந்தியா

மன்மோகன் சிங் மறைவு.. அரசு நிகழ்ச்சிகள் ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (வயது 92) சிகிச்சை பலனின்றி காலமானார்.

மன்மோகன் சிங் மறைவு.. அரசு நிகழ்ச்சிகள் ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு
மன்மோகன் சிங் மறையொட்டி அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். இந்திய அரசியலில் மன்மோகன் சிங் செய்த பொருளாதாரப் புரட்சி இன்றும் நினைவுகூரப்படுகிறது. 2008-ல் உலகம் முழுவதிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை திறமையுடன் சமாளித்தார்.

இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பிரதமர் மன்மோகன் சிங்கின் நிலைப்பாட்டை உலகமே வியந்து பார்த்தது. இவ்வாறு அரசியலில் பல சாதனைகள் செய்த மன்மோகன் சிங் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வு பெற்று வந்தார்.

92 வயதான மன்மோகன் சிங் நேற்று (டிச.26) தனது அரசு குடியிருப்பில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், மன்மோகன் சிங் டெல்லியின் எய்ம்ஸ்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆறு பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மன்மோகன் சிங் இரவு 9.51 மணியளவில் உயிரிழந்தார்.

இதையடுத்து மூத்த காங்கிரஸ் தலைவர்களான சோனியாகாந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர். இதுபற்றிய தகவலை எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மன்மோகன் சிங் மறைவிற்கு பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி ஏழு நாட்கள் தூக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.