இந்தியா

வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்.. பால் ஊற்றி புனித நீராடிய போலீஸ் அதிகாரி!

உத்தரப் பிரதேசத்தில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீட்டுக்குள் புகுந்த கங்கை நீரில் போலீஸ் அதிகாரி ஒருவர் பால் ஊற்றி புனித நீராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்.. பால் ஊற்றி புனித நீராடிய போலீஸ் அதிகாரி!
Police officer takes holy dip in floodwaters
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரயாக்ராஜ் நகரில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்​ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரியின் பக்திப் பரவசம்

இந்தச் சூழலில், மாநில காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் சந்திரதீப் நிஷாத், வெள்ளத்தில் மூழ்கிய தனது வீட்டின் வாசலிலேயே கங்கை நதிக்கு பூஜை செய்து, மலர்கள் தூவி, பால் அபிஷேகம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "இன்று காலை (நேற்று) பணிக்கு புறப்பட்டபோது, தாய் கங்கா என் வீட்டுக்கு வந்திருந்தார். என் வீட்டு வாசலிலேயே அவரை வணங்கி ஆசி பெற்றேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஒரு வீடியோவில், சீருடையில் இருக்கும் நிஷாத், தன் வீட்டு வாசலில் சூழ்ந்துள்ள கங்கை வெள்ளத்தில் ரோஜா இதழ்களைத் தூவி, பின்னர் பால் ஊற்றி வணங்கினார். மற்றொரு வீடியோவில், அவர் மேலாடை இல்லாமல், இடுப்பளவு தண்ணீரில் இறங்கி கங்கை தாயை வணங்குவதாக கூறி புனித நீராடுகிறார். "ஜெய் கங்கா மாதா" என்று பக்திப் பரவசத்துடன் அவர் பிரார்த்தனை செய்கிறார்.

வெள்ள நிலவரம் மற்றும் நிவாரணப் பணிகள்

வெள்ளத்தால் பிரயாக்ராஜில் 61க்கும் மேற்பட்ட வார்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 339 குடும்பங்களைச் சேர்ந்த 1,400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள 14 நிவாரண முகாம்களில் சுமார் 4,000 பேர் தங்கியுள்ளனர். மீட்புப் பணிகளுக்காகப் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வெள்ள நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட "டீம்-11" என்ற குழுவை அமைத்துள்ளார். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.