இந்தியா

வங்கதேசத்திற்கும் உளவு பார்த்தாரா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா...விசாரணையில் சிக்கிய புதிய ஆதாரம்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா விரைவில் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வங்கதேசத்திற்கும் உளவு பார்த்தாரா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா...விசாரணையில் சிக்கிய புதிய ஆதாரம்
உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா சமீபத்தில் கைது செயப்பட்டார். இந்தியா- பாகிஸ்தான் இடையே சமீபத்தில் போர் ஏற்படும் சூழல் உருவானது. இரு நாடுகளும் எல்லைகளில் கடும் தாக்குதல்களை நடத்தியது. மேலும் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் என்.ஐ.ஏ மற்றும் ஐ.பியினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது

விசாரணையில், அவருக்கு வங்கதேசத்துடன் தொடர்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் அவர் மீது சந்தேகம் இன்னும் அதிகமாகி உள்ளது. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர் மீது எதிரி நாட்டோடு ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐஎஸ்ஐயின் சில செயல்பாட்டாளர்கள் உட்பட பல பாகிஸ்தான் முகவர்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் திணிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக யூடியூபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது குறித்து ஹரியானா காவல்துறை விசாரித்து வருகிறது. மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முக்கிய தகவலை கண்டறிந்துள்ளனர். யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா விரைவில் வங்கதேசத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.


சிக்கிய புதிய தகவல்

ஜோதியின் விசா படிவ விண்ணப்பத்தை பார்த்தபோது, இது அவரது பயணத் திட்டத்தில் அடுத்த சேருமிடம் பங்களாதேஷ் என்பதைக் காட்டுகிறது. தேதியிடப்படாத பங்களாதேஷ் விசா விண்ணப்பப் படிவத்தில் அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் டாக்காவின் உத்தராவில் உள்ள தனது 'தற்காலிக முகவரி' என்று நிரப்பியுள்ளார்.
விசா விண்ணப்பப் படிவம் தேதியிடப்படவில்லை என்றாலும், அவரது வருகை வீடியோ படப்பிடிப்பின் போர்வையில் வங்கதேச செயல்பாட்டாளர்களுடன் ஒத்துப்போகவும் நிலைநிறுத்தவும் நோக்கமாகக் கொண்டிருந்ததாக விசாரணைக் குழுவால் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுடன் (PIO) தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, யூடியூபரிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் புலனாய்வுப் பிரிவு (IB) அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பாகிஸ்தான், சீனா மற்றும் பிற நாடுகளுக்கு யூடியூபர் பயணம் செய்தது உள்ளிட்டவை உன்னிப்பாகக் ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.விசாரணையின் போது யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா வருத்தப்படாமல் இருந்ததாகவும், தனது பேச்சு சுதந்திரத்திற்காக குறிவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தீவிர விசாரணை

பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் முக்கியமான இராணுவத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பஹல்காம் தாக்குதல்களின் பின்னணியில் பாதுகாப்பு மீறல்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வங்கதேசத்திற்கு அவர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் பாகிஸ்தானிய நபர்களை சந்திக்க திட்டமிட்டாரா அல்லது வங்கதேச அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டிருந்தாரா என்ற கோணத்திலும், யூடியூப் வீடியோ பதிவிற்காக செல்ல திட்டமிட்டிருந்தாரா என்ற பல்வேறு கோணங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.