இந்தியா

Delhi Rains: தலைநகரை புரட்டிப் போட்ட கனமழை..4 பேர் உயிரிழப்பு..போக்குவரத்து சேவை பாதிப்பு

பலத்த காற்றுடன் பெய்த கனமழையினால் தலைநகர் டெல்லி மற்றும் NCR சுற்றுவட்டார பகுதி ஸ்தம்பித்து போயுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Delhi Rains: தலைநகரை புரட்டிப் போட்ட கனமழை..4 பேர் உயிரிழப்பு..போக்குவரத்து சேவை பாதிப்பு
Delhi Rains: தலைநகர் டெல்லி மற்றும் NCR சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் நகரின் பல்வேறு பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளன. ஜாஃபர்பூர் பகுதியில் பலத்த காற்றினால் மரமொன்று வீடு மீது விழுந்தது. துரதிர்ஷ்டவசமாக வீட்டிற்குள் இருந்த ஜோதி என்ற பெண்மணியும் அவரது 3 குழந்தைகளும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பரிதாபமாக அதிகாலை 5:30 மணியளவில் உயிரிழந்தனர். ஜோதியின் கணவர் அஜய் காயமடைந்த நிலையில், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

நேற்றைய தினம் பல்வேறு இடங்களிலிருந்து மரம் விழுந்துள்ளதாக மொத்தம் 98 அழைப்புகள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளது. கனமழை எதிரொலியால் இன்று காலை சுமார் 120 விமானங்கள் தாமதமாகின. பலத்த காற்று காரணமாக மரங்கள் மின்கம்பிகளில் விழுந்ததால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 முதல் 20 ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகியுள்ளன.

டெல்லியின் முக்கிய வணிகப்பகுதிகளான துவாரகா, கான்பூர், சவுத் எக்ஸ்டன்சன், மின்டோ சாலை, லஜ்பத் நகர் மற்றும் மோதி பாக் போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மழையின் அளவு என்ன?

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த மூன்று மணி நேரத்தில், நகரின் முதன்மை வானிலை ஆய்வு மையமான சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் 77 மி.மீ மழையைப் பதிவு செய்துள்ளது. லோதி சாலையில் 78 மி.மீ, பாலத்தில் 30 மி.மீ, நஜாஃப்கரில் 19.5 மி.மீ, பிதாம்புராவில் 32 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கு சனிக்கிழமை வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுத்தொடர்பாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் நடப்பாண்டு மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல்வரின் உத்தரவு:

மழைநீர் பாதிப்பை நேரில் ஆய்வு செய்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், ”டெல்லியின் பல பகுதிகளில் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் உள்ளது. சில இடங்களில் வடிகால்கள் இல்லை; மற்ற இடங்களில், வடிகால்கள் அடைக்கப்பட்டுள்ளன, சில இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. டெல்லி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டு தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளை சரி செய்ய அறிவுறுத்தியுள்ளேன். தண்ணீர் தேங்கும் பிரச்சினை எங்கிருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.