இந்தியா

டெல்லி குண்டுவெடிப்பு.. தாக்குதலுக்கு முன் உமர் முகமது பேசிய அதிர்ச்சி வீடியோ!

“தற்கொலைத் தாக்குதல் ஒரு தியாகச் செயல்” என டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உமர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பு.. தாக்குதலுக்கு முன் உமர் முகமது பேசிய அதிர்ச்சி வீடியோ!
Umar Mohammed video
டெல்லி செங்கோட்டைக்கு அருகே கடந்த 10 ஆம் தேதி கார் வெடித்த சம்பவத்தில் 15 பேர் பலியாகினர். இந்தக் கார் வெடிப்புச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று தேசிய புலனாய்வு முகமை (NIA) உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மருத்துவர் உமர் முகமது நபி பேசிய ஒரு வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் மற்றும் கைதுகள்

செங்கோட்டை அருகேயுள்ள கார் வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என NIA அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மருத்துவர் உமர் முகமது நபிதான் தற்கொலைத் தாக்குதல் மூலமாகக் காரை வெடிக்க வைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை NIA அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாதக் கும்பல்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையிலும் விசாரணை நடைபெறுகிறது.

கார் வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்கிக் கொடுத்து, அதனை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் முகமது நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஏற்கெனவே அமீர் ரஷீத் அலி மற்றும் ஜசிர் வானி ஆகிய இருவரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வெளியான அதிர்ச்சி வீடியோ

இந்த நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்பாக மருத்துவர் உமர் முகமது பதிவு செய்த ஒரு வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடந்த நவம்பர் 10 ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவில், உமர் தனியாக ஓர் அறையில் அமர்ந்து தற்கொலைத் தாக்குதல் பற்றிய யோசனையை விவாதிப்பதைப் போன்று தெரிகிறது.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, "தற்கொலை பற்றி அனைவராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுவெடிப்புக்கு எதிராகப் பல வாதங்களும் முரண்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நிச்சயமாக இறக்கப் போகிறார் என்று முன்பே தெரிந்தும் அந்தக் காரியத்தைச் செய்வதால் அதைத் தியாகிகள் தாக்குதல் என்று சொல்ல வேண்டும். மரணத்திற்கு அஞ்சாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை வெளியிட்டவர் யார், எவ்வாறு வெளியானது போன்ற எந்தத் தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை. கார் வெடிப்பு சம்பவத்தின் அதிர்வலைகள் குறையாத நிலையில், இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.