இந்தியா

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன்? மத்திய அரசு விளக்கம்!

உலகெங்கும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் லாக்டவுன் போடப்பட உள்ளதாகப் பரவும் வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன்? மத்திய அரசு விளக்கம்!
Lockdown Again
மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகெங்கும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் லாக்டவுன் போடப்பட உள்ளதாகப் பரவும் வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால், ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த இக்கட்டான சூழல் குறித்து ஆலோசிக்கப் பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில், கொரோனா காலத்தைப் போல மீண்டும் நாடு முழுவதும் லாக்டவுன் மற்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரின் மறுப்பு

இந்த வதந்திகள் குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். "லாக்டவுன் போடப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது; மத்திய அரசிடம் இது போன்ற எந்தத் திட்டமும் இல்லை" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பொறுமையுடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எரிபொருள் இருப்பு குறித்து உறுதி

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சி வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குகளில் குவிந்து வருவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சவாலான இந்தச் சூழலை எதிர்கொள்ள மோடி அரசு முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், எரிபொருள் விநியோகம் தடைபடாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். எனவே, தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அரசுத் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.