இந்தியா

தேர்தல் 2026: ஒரே வாக்குச்சாவடியில் அனைத்து இஸ்லாமிய வாக்காளர்கள் பெயர்களும் நீக்கம்!

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் 2026: ஒரே வாக்குச்சாவடியில் அனைத்து இஸ்லாமிய வாக்காளர்கள் பெயர்களும் நீக்கம்!
West Bengal
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியில், வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் (SIR) போது, மாநிலம் முழுவதும் சுமார் 76 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 58 லட்சம் பெயர்கள் ஆரம்பகட்டத்திலும், மீதமுள்ளவை பரிசீலனைக்குப் பிறகும் நீக்கப்பட்டுள்ளன. சுமார் 28 லட்சம் பெயர்கள் இன்னும் பரிசீலனையிலேயே (Under Adjudication) உள்ளன.

பசீர்ஹாட் தொகுதியில் சர்ச்சை

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பசீர்ஹாட் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட போரோ கோப்பரா கிராமத்தில் உள்ள 5-ஆம் எண் வாக்குச்சாவடியில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த வாக்குச்சாவடியில் இருந்த 992 வாக்காளர்களில், 38 பேர் இறப்பு அல்லது இடம் பெயர்தல் காரணமாக நீக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களில் தகுதியை நிரூபிக்க அழைக்கப்பட்ட 358 பேரில், 18 பேரைத் தவிர மற்ற 340 இஸ்லாமிய வாக்காளர்களின் பெயர்களும் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளன.

பூத் அலுவலர் பெயரும் நீக்கம்

அதிர்ச்சிகரமான விஷயமாக, அதே வாக்குச்சாவடியில் பணியாற்றும் பூத் நிலை அலுவலரான (BLO) முகமது ஷபியுல் ஆலம் என்பவரது பெயரும் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. "தேவையான 11 ஆவணங்களில் 3 அல்லது 4 ஆவணங்களைச் சமர்ப்பித்தும் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன" என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது ஒரு திட்டமிட்ட சதி என்று திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

தேர்தல் ஆணையம் விளக்கம்

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள், தரவுகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது மென்பொருள் பிழைகள் (PDF to CSV conversion glitch) காரணமாக இது நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தகுதியான வாக்காளர்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று உறுதி அளித்துள்ளனர். இருப்பினும், தங்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டதைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.