இந்தியா

கலால் வரி குறைப்பு: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்குமா?

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.

கலால் வரி குறைப்பு: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்குமா?
Excise duty reduction
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. இது எரிபொருள் விலை மேலும் உயர்வதைத் தடுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 119 டாலர் வரை உயர்ந்து, தற்போது 100 டாலர் அளவில் உள்ளது. இந்த இக்கட்டான சூழலில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டவும், பொதுமக்கள் மீது கூடுதல் சுமை விழாமல் தடுக்கவும் மத்திய நிதியமைச்சகம் கலால் வரியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

வரி குறைப்பு விவரம்

புதிய அறிவிப்பின்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 13-லிருந்து ரூ. 3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், டீசல் மீதான ரூ. 10 கலால் வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனமான நயாரா தனது எரிபொருள் விலையை அண்மையில் உயர்த்திய நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் விலையை உயர்த்தத் திட்டமிட்டிருந்தன. அரசின் இந்த வரி குறைப்பு நடவடிக்கை மூலம் எண்ணெய் நிறுவனங்களின் விலை உயர்வு முயற்சி தற்காலிகமாகக் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலையில் மாற்றம் இருக்குமா?

மத்திய அரசின் இந்த வரி குறைப்பானது, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைச் சரிசெய்யவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, தற்போது விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உடனடி குறைப்பு எதுவும் இருக்காது. இருப்பினும், சர்வதேசச் சூழலால் ஏற்படவிருந்த மிகப்பெரிய விலை உயர்வு இதன்காரணமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த ஒரு மாதமாக விலை ஏற்றத்தைத் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.