இந்தியா

ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தை.. பெற்றோர் செய்த கொடூர செயல்

மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை, ஜன்னல் வழியே வீசிக் கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தை.. பெற்றோர் செய்த கொடூர செயல்
Baby Born On Bus, Then Thrown Out Of Window By parents
மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில், ஓடும் ஸ்லீப்பர் கோச் பேருந்தில் 19 வயது பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அக்குழந்தையை பேருந்தில் இருந்து வெளியே வீசி கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று (ஜூலை 15) காலை 6:30 மணியளவில், புனேவில் இருந்து பர்பானிக்கு தனியார் சொகுசு பேருந்தில் அல்தாஃப் ஷேக் மற்றும் அவரது மனைவி ரித்திகா தேரே பயணம் செய்து கொண்டிருந்தனர். பத்ரி-சேலு சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, நிறைமாத கர்ப்பிணியான ரித்திகா தேரேவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, ஓடும் பேருந்திலேயே ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து, அந்தத் தம்பதியினர் பச்சிளம் குழந்தையை யாருக்கும் தெரியாமல் ஒரு துணியில் சுற்றி, பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் குழந்தை சாலையில் விழுந்து உயிரிழந்தது.

இந்த நிலையில், பேருந்தின் ஓட்டுநர், ஜன்னலுக்கு வெளியே ஏதோ வீசப்பட்டதைக் கவனித்து, அல்தாஃப் ஷேக்கிடம் விசாரித்தபோது, தனது மனைவிக்கு வாந்தி ஏற்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். அதே நேரத்தில், சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர், பேருந்து ஜன்னல் வழியாக குழந்தை வீசப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து சொகுசு பேருந்தை இடைமறித்து பிடித்தனர். பின்னர் போலீசார் பேருந்தில் ஏறி சோதனை நடத்தி, சந்தேகத்தின் பேரில் குறிப்பிட்ட தம்பதியைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையின் போது, குழந்தையை வளர்க்க தங்களிடம் போதிய வசதி இல்லை என்பதால், குழந்தையை ஜன்னல் வழியாக வீசிக் கொன்றதாக அல்தாஃப் ஷேக் மற்றும் ரித்திகா தேரே தெரிவித்துள்ளனர்.

மேலும், அல்தாஃப் ஷேக் மற்றும் ரித்திகா தேரே இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புனேயில் ஒன்றாக வசித்து வருவது தெரியவந்தது. அவர்கள் கணவன்-மனைவி என்று கூறிக் கொண்டாலும், அதனை நிரூபிக்க எந்த ஆவணத்தையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.

குழந்தை இறந்ததால், அல்தாஃப் ஷேக் மற்றும் ரித்திகா தேரே மீது பிறப்பை மறைத்தல் மற்றும் சடலத்தை ரகசியமாக அப்புறப்படுத்துதல் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.