இந்தியா

"தமிழ் கலாசாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்"- ஜனநாயகனுக்காக குரல் கொடுத்த ராகுல் காந்தி!

ஜன நாயகன் திரைப்படத்தை தடுக்கும் முயற்சியானது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதலாகும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


Rahul Gandhi and Vijay
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல், தற்போது ஒரு தேசிய அளவிலான அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி களமிறங்கியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தியின் அதிரடிப் பதிவு

தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' கடந்த 9-ஆம் தேதியே வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கக் காலதாமதம் செய்ததால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசை ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வந்த நிலையில், தற்போது ராகுல் காந்தியும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, 'ஜனநாயகன்' திரைப்படத்தை முடக்க நினைப்பது தமிழ் கலாசாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், "பிரதமர் மோடி அவர்களே, தமிழ் மக்களின் குரலை நசுக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது" என்றும் அவர் நேரடியாகப் பிரதமருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்தப் பதிவைத் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் உள்ளிட்டோர் வரவேற்றுப் பகிர்ந்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் சலசலப்பு

ராகுல் காந்தியின் இந்தத் திடீர் ஆதரவு தமிழக அரசியலில் புதிய யூகங்களைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கும் காங்கிரஸுக்கும் இடையே திரைமறைவில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகச் செய்திகள் பரவி வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்தப் பதிவு திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.