இந்தியா

புடவையால் ஏற்பட்ட வாக்குவாதம்.. திருமணத்துக்கு 1 மணி நேரம் முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

குஜராத்தில் திருமணம் நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு மணப்பெண்ணை மணமகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புடவையால் ஏற்பட்ட வாக்குவாதம்.. திருமணத்துக்கு 1 மணி நேரம் முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Bride Killed By Fiance Hour Before Wedding
குஜராத் மாநிலம், பாவ்நகரில் திருமணம் நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு மணப்பெண்ணை மணமகன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புடவையால் ஏற்பட்ட வாக்குவாதம்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஜன் பரைய்யா மற்றும் சோனி ரத்தோட் ஆகியோர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் திருமணம் செய்யாமலேயே லிவ்வின் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவீட்டாரும் இவர்களுக்கு நிச்சயதார்த்தச் செய்து வைத்துள்ளனர். மேலும், கடந்த 15 ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், திருமணத்துக்கு சரியாக ஒரு மணிநேரத்துக்கு முன், சஜன் பரைய்யா - சோனி ரத்தோட் இடையே திருமணத்துக்கு வாங்கிய புடவை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

திருமணத்திற்கு முன் நடந்த கொடூரம்

இந்த வாக்குவாதம் வரதட்சணை குறித்து நீண்டதால் ஆத்திரமடைந்த மணமகன் சஜன், சோனியை இரும்புக் கம்பியால் கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், அவரது தலையைச் சுவரில் மோதியதில், சம்பவ இடத்திலேயே சோனி உயிரிழந்துள்ளார். கொலை செய்தபின், சஜன் வீட்டைச் சேதப்படுத்திவிட்டுச் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த கொடூர சம்பவத்தை கண்டு கதறியழுத குடும்பத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சோனியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தப்பியோடிய சாஜனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், சஜன் பக்கத்து வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டதாகவும் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.