மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம் மால்வன் என்ற இடத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டை பகுதியில் சத்ரபதி சிவாஜிக்கு 35 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி இந்திய கடற்படை தினத்தில் பிரம்மாண்ட சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி நேரில் திறந்து வைத்திருந்தார்.
கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கம்பீரமாக நின்று கொண்டிருந்த சத்ரபதி சிவாஜி சிலை இன்று திடீரென உடைந்து விழுந்து சுக்குநூறாக நொறுங்கியுள்ளது. இதனால் மால்வன் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக மால்வன் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கடுமையான காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடியே நேரில் வந்து திறந்து வைத்துள்ளதால் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்தது நாடு முழுவதும் பேசும்பொருளாகி உள்ளது. சிவாஜி சிலை கட்டுமானத்தின் தரம் குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் (சரத் பவார் பிரிவு) கேள்வி எழுப்பியுள்ளன. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார் பிரிவு) மகாராஷ்டிர மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், ''மகாராஷ்டிர அரசு முறையாக பராமரிக்காததால் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்துள்ளது.
இதற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும். ஏக்நாத் ஷின்டேவின் அரசு இந்த சிலையை மிக விரைவில் திறக்க வேண்டும்; பிரதமர் மோடியை வைத்து திறந்து வைக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தியதே தவிர, சிலை கட்டுமானத்தின் தரத்தில் கவனம் செலுத்தவில்லை. மகாராஷ்டிரா அரசு அதிகளவு கமிஷன் பெற்றுக் கொண்டு தங்களுக்கு தெரிந்த கட்டுமான நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்குவதே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணம்'' என்று கூறியுள்ளார்.
இதேபோல் எம்.எல்.ஏவும், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியை சேர்ந்தவருமான வைபவ் நாயக் கூறுகையில், ''சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்தது குறித்து மகாராஷ்டிரா அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். புதிய சிலையை விரைவில் நிறுவ வேண்டும்'' என்றார்.
இந்நிலையில், சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''மகாராஷ்டிராவின் காவல் தெய்வமான சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த சிலை கடற்படையால் நிறுவப்பட்டது. மணிக்கு 45 கிமீக்கு மேல் வலுவான காற்று வீசியதன் காரணமாக சிலை உடைந்து விழுந்துள்ளது.
சிலை உடைந்தது குறித்து பொதுப்பணித்துறை மற்றும் கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கான காரணம் கண்டறியப்படுவதுதான், அதே இடத்தில் சத்ரபதி சிவாஜி சிலை மீண்டும் நிறுவப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.