சினிமா

கவுன் பனேகா குரோர்பதி.. அமிதாப் பச்சனுக்கு பதிலா சல்மான்கானா?

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'கவுன் பனேகா குரோர்பதி' (KBC) பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது. இதற்கு காரணம், இந்த நிகழ்ச்சியை நீண்ட ஆண்டுகளாக தொகுத்து வந்த அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக நடிகர் சல்மான் கான் புதிய தொகுப்பாளராக வருவார் எனவும் தகவல் பரவியது தான். இதுக்குறித்த உண்மை தன்மை என்ன?

கவுன் பனேகா குரோர்பதி.. அமிதாப் பச்சனுக்கு பதிலா சல்மான்கானா?
Amitabh Bachchan Prepares for New Season of Kaun Banega Crorepati
நீங்கள் வெல்லலாம் ஒரு கோடி என தமிழில் சூர்யா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி உங்கள் நினைவில் இப்போதும் இருக்கலாம். சூர்யாவிற்கு பிறகு பிரகாஷ் ராஜ், அரவிந்த் சுவாமி, ராதிகா சரத்குமார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர். தமிழில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாத நிலையில் இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. தமிழ் மட்டுமல்ல தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற மற்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்தது.

ஆனால் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஹிந்தியில் வெற்றிகரமாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது 'கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அமிதாப் பச்சன் என்றால் மிகையல்ல. முதல் சீசன் தொடங்கியது முதல் தற்போது 17-வது சீசனை நெருங்கியுள்ள 'கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்வில் ஒரே ஒரு சீசன் தவிர்த்து மற்ற அனைத்தையும் திறம்பட தொகுத்து வழங்கியது அமிதாப் பச்சன் தான்.

மூன்றாவது சீசனில் மட்டும் பங்கேற்காத அமிதாப்:

மூன்றாவது சீசன் 2007 ஜனவரி 22 அன்று தொடங்கியது. அப்போதைய காலக்கட்டத்தில் அமிதாப் பச்சனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் அந்த சீசன் முழுவதையும் தொகுத்து வழங்கினார். உடல்நிலை தேறிய பின், மீண்டும் நிகழ்வினை தொகுத்து வழங்க அமிதாப் பச்சன் முடிவெடுத்தார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்தாண்டு நடைப்பெற உள்ள 17-வது சீசனை அமிதாப் பச்சனுக்கு பதிலாக சல்மான் கான் தொகுத்து வழங்குவார் என தகவல்கள் பரவியது. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், மிட்-டே, இந்தியா டுடே மற்றும் பாலிஸ்பைஸ்.காம் போன்ற முன்னணி ஊடகங்கள், சல்மான் கான் KBC தொகுப்பாளராக அமிதாப் பச்சனுக்குப் பதிலாக வரவுள்ளார் என்ற செய்திகளில் "எந்த உண்மையும் இல்லை" என்று உறுதிப்படுத்தியுள்ளன.

நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் சோனி டிவியுடன் தொடர்புடைய நெருங்கிய வட்டாரங்கள், தொகுப்பாளரை மாற்றுவது குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளன. முன்னதாக, ஏப்ரல் 4, 2025 அன்று, சோனி டிவி KBC 17-க்கான விளம்பர முன்னோட்டத்தை வெளியிட்டது. அதில் அமிதாப் பச்சன் நிகழ்ச்சியின் புதிய சீசன் தொடங்க உள்ளதை குறிக்கும் வகையில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஒருப்புறம் வதந்திகள் பரவி வரும் நிலையில், இதுக்குறித்து நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன இருந்தாலும் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குவது போல் வருமா? என 'கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போதைய தகவல்படி, ஜூலை மாதம் 17-வது சீசனுக்கான படப்பிடிப்புத் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமிதாப் பச்சனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.