சினிமா

கமலுடன் நடிக்க ஆசை: அரசியல் கேள்விக்கு 'நோ கமெண்ட்ஸ்'.. நடிகர் ரஜினிகாந்த்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருப்பதாகவும் அதற்குச் சரியான கதை, கதாபாத்திரம் அமைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கமலுடன் நடிக்க ஆசை: அரசியல் கேள்விக்கு 'நோ கமெண்ட்ஸ்'.. நடிகர் ரஜினிகாந்த்!
Actor Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை எனத் தெரிவித்துள்ளார். மேலும், ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்களுக்கு அடுத்த படம் பண்ணப் போவதாகக் கூறியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படம் நல்ல வசூலைக் குவித்தது. இதையடுத்து, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களாகவே தகவல் வெளியானது. இதை கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தினார்.

'கமலுடன் நடிக்க ஆசை'

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "அடுத்து ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒரு படம் பண்ணப் போகிறேன். ஆனால், அப்படத்திற்கான இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை" என்று கூறினார். மேலும், கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பது குறித்துக் கேட்கப்பட்டபோது, "கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை. அதற்குச் சரியான கதை, கதாபாத்திரம் அமைய வேண்டும். அது கிடைத்தால் நிச்சயம் நடிப்போம்" என்று தெரிவித்தார். இதையடுத்து அவர் கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

ஜெயிலர் 2 படப்பிடிப்பு

மேலும், கோவை சென்றடைந்த ரஜினியிடம் ஜெயிலர் 2 படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்புக்காகப் பாலக்காடு செல்கிறேன், அங்கு 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளது" என்றார்.

மேலும், திரைக்கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் வாக்காக மாறுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ''நோ கமெண்ட்ஸ்" (No Comments) என்று கூறிவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றார்.